உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகள் நாளை (பெப்ரவரி 07) நள்ளிரவுடன், முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் மொகமட், “எதிர்வரும் 10ஆம் நாள் 341 உள்ளூராட்சி சபைகளுக்கு, 8, 356 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல், நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலில் 43 அரசியல் கட்சிகள் மற்றும் 222 சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 57, 252 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வரும் சனிக்கிழமை காலை 7 மணி தொடக்கம், மாலை 4 மணி வரை 13,400 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறும். தேர்தல் முடிந்ததும், 4 மணிக்குப் பின்னர் அந்தந்த வாக்களிப்பு நிலையங்களிலேயே வாக்குகள் எண்ணப்படும்.
வாக்குகள் எண்ணும் நிலையத்தில் இருந்து 400 மீற்றருக்குட்பட்ட பிரதேசத்துக்குள் வெளியாட்கள் நுழைவதற்கோ, தங்கியிருப்பதற்கோ அனுமதிக்கப்படமாட்டார்கள்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் அமைச்சர்களையோ, நாடாளுமன்ற உறுப்பினர்களையோ, வாக்களிப்பு நிலையங்களுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று, தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய, அனைத்து தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர்களோ, அதிகாரிகளோ தேர்தல் கண்காணிப்பு அல்லது ஏனைய பணிகள் தொடர்பாக வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும் போது, ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு அதிகாரிகளை வெளியே நிறுத்தி விட்டு பாதுகாவலர்கள் இன்றியே உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் பணித்துள்ளார்.
அதேவேளை, ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திலும், துப்பாக்கி ஏந்திய இரண்டு நிறுத்தப்படுவர். யாரேனும், வாக்குப்பெட்டிகளை கைப்பற்ற முனைந்தால், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் ஆணையை காவல்துறை மா அதிபர் வழங்கியுள்ளார்.