“காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவரும் இந்த நாட்டில் எங்கும் ஒழித்துவைக்கப்படவில்லை. அந்த இடங்களில் எல்லாம் தேடிப்பார்த்த பின்னரே இதனைத் தெரிவிக்கின்றேன். எனவே காணாமற்போனோரின் உறவினர்களுக்கு நிதியுதவி வழங்கவேண்டுமாயின் அதனை நான் ஏற்பாடு செய்வேன்”
இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் இன்று அறிவித்தார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது. அதில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்று உரையாற்றினார். அதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
இராணுவம் வசமிருந்த மக்களின் காணிகளில் 75 வீதமானவை விடுவிக்கப்பட்டுள்ளன. மீதமனமுள்ள 25 வீத காணிகளும் விடுவிக்கப்படும். அந்த விடயத்தில் நான் அக்கறையுடன்தான் இருக்கின்றேன்.
வடக்கைச் சேர்ந்த பலர் காணாமற்போயுள்ளனர். காணாமற்போனோரின் தாய்மார்கள் உறவினர்கள்,யாழ்ப்பாணத்திலும் என்னைச் சந்தித்துப் பேசினார்கள், கொழும்புக்கு வந்தும் என்னைச் சந்தித்தார்கள்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் இந்த நாட்டிலே ஒழித்துவைக்கப்பட்டுள்ளனர் என அவர்கள் சொல்கிறார்கள். இராணுவ முகாங்களிலே, பொலிஸ் நிலையங்களிலே மற்றும் காடுகளிலே அவர்கள் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர் என்றுதான் உறவினர்கள் என்னிடம் கூறினார்கள்.
அரசு என்ற வகையில் நான் அவர்களை அந்த இடங்களிலே தேடிப் பார்த்தேன். காணாமற்போனதாகக் கூறப்படும் எவரும் அந்த இடங்களிலே மறைத்துவைக்கப்படவில்லை என்பதை நான் கூறுகின்றேன்.
எனவே காணாமற்போனோரின் உறவினர்களுக்கு நிதியுதவி வழங்கவேண்டுமாயின் அரசு என்றவகையில் அதனை நாம் செய்வோம். காணாமற்போனவர்கள் வடக்கில் மாத்திரமில்லை. போர்க்காலத்தில் தென்னிலங்கையிலும்கூட சிங்கள, தமிழ், முஸ்லிம் அன்பர்கள் பலரும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
அரசு என்ற வகையில் என்னால் இயன்ற சகல நடவடிக்கைகளையும் நான் முன்னெடுப்பேன் என்று கூறிக்கொள்கின்றேன். எனக்கு மறைப்பதற்கு ஒன்றுமேயில்லை. நான் பகிரங்கமாகத்தான் பேசுவேன். உங்களுடன் பேசுவதற்கு நான் எந்தநேரமும் தயாராகத்தான் இருக்கின்றேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.