யாழ்ப்பாணம் றக்கா வீதி மருதடிப் பிரதேசத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியப் பேரவையின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் மீது குழப்பம் விளைவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் நேற்று முன்தினம் (03.02.2018) மாலை மக்கள் கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுக்கொண்டிருந்தபோது தாம் ஈபிடிபியினர் என கூறியவாறு ஈபிடிபியின் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த சில இளைஞர்கள் இப்பகுதியில் வேறு கட்சிகள் கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்போவதில்லை எனக் கூறியவாறு அங்கிருந்த ஒலி மற்றும் ஒளி சாதனங்களின் வயர்களை அறுத்துவிட்டு மேடைப்பகுதியில் அமந்திரந்துள்ளனர்.
பின்னராக மாலை 06.30 மணியளவில் குறித்த பிரதேசத்தில் தமிழ்த் தேசியப் பேரவையின் கலந்துரையாடலுக்கு மக்கள் திரளத் தொடங்கிய நிலையில் அங்கிருந்து குறித்த தரப்பினர் நழுவிச் சென்றுள்ளனர்.
அதன் பின்னராக யாழ் மாநகர வேட்பாளர்கள்க மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளரும் யாழ் மாநகர முதன்மை வேட்பாளருமான வி.மணிவண்ணன் உள்ளிட்டோர் மக்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது திடீரென ஆட்டோக்களில் வந்த சில குண்டர்கள் இது ஈபிடிபியின் இடம் இங்கு பிரச்சாரத்தில் ஈடுபட எவருக்கும் அனுமதி இல்லை எனக் கூச்சலிட்டவாறு கலந்துரையாடல் நடைபெற்ற இடத்தினை நோக்கி கற்களைக் கொண்டு தாக்குதல் மேற்கொண்டுவிட்டுச் சென்றுள்ளனர்.