நீதிமன்ற நடவடிக்கை தொடர்பில் பொய்களை கூறியுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பனர் ரட்ணஜீவன் கூல் நீதிமன்ற நீயாயாதிக்கத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளார் என யாழ். பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை தலைவர் கு.குருபரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
குறித்த தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “கலாநிதி ரட்ணஜீவன் கூல் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் B 25/2018 என்ற வழக்குத் தொடர்பில் சொல்லியுள்ள விடயங்கள் ஒரு பகிரங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக இருக்கும் ஒருவர் கூறக்கூடிய விடயங்கள் அல்ல.
11 ஆம் திகதி அந்த ஆலயத்தை சேர்ந்த ஞானஸ்கந்தசர்மா குருக்கள் ஆஜராகுமாறு மல்லாகம் நீதிமன்றம் அறிவித்தல் வழங்கியது. ஆனால் கலாநிதி கூல் அறிவித்தலையும் அழைப்பாணையையும் ஒன்று போல் கருதி கூறுகின்றார். நொட்டிஸ் என்பதற்கும் சமன்ஸ் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது.
நீதிமன்றம் பக்கச்சார்பாக நடந்து கொள்ளுகின்றது என்ற தோரணையில் அவர் வெளியிட்டிருக்கும் பொய்களை தான் வண்மையாக கண்டிக்கின்றேன் நீதிமன்ற விசாரணைகளில் தலையிட்டு, அதனை ஒரு திசை நோக்கி திருப்புவது தண்டணைக்குரிய குற்றமாகும்” எனத் தெரிவித்தார்.