இந்திய வரவு-செலவுத் திட்டத்தில், இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள உதவித் திட்டங்களுக்காக கடந்த ஆண்டைவிட இரண்டு மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 75 கோடி இந்திய ரூபா ஒதுக்கப்பட்ட இலங்கைக்கு, இம்முறை 150 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியா புனரமைக்கவுள்ளது.
தற்போது ஆட்சியில் உள்ள நரேந்திர மோடி அரசாங்கத்தின் கடைசி வரவுசெலவுத் திட்டம் நேற்று (வியாழக்கிழமை) இந்திய நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லியினால் சமர்ப்பிக்கப்பட்டது.
அதில், இலங்கை உள்ளிட்ட அயல்நாடுகளில் இந்திய வெளிவிவகார அமைச்சு மேற்கொள்ளும் உதவித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதில் இந்தியாவின் கடல்சார் மூலோபாய இராஜதந்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அயல்நாடுகளான இலங்கை, நேபாளம், பூட்டான், மாலைதீவு, சீஷெல்ஸ், மொறிசியஸ் போன்ற நாடுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக சீனாவின் தலையீடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவு நாடுகளுக்கு இவ்வாறு கணிசமான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.