கடந்த காலங்களில் இனவாதம் பேசி மக்களை உசுப்பேத்தி வாக்குப்பெற்று மாநகரசபை உறுப்பினரானவர்கள் இதுவரை என்ன செய்தார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவர். கடந்த காலங்களில் வெறுமனே ஆசனத்தையும் தமது சட்டைப்பையையும் நிரப்பியவர்கள் மீண்டும் என்ன முகத்தோடு மக்கள் முன் வாக்கு கேட்டு வருகின்றார்கள். கடந்த காலங்களில் இவர்கள் வாக்கு கேட்டு வரும் போது பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தார்கள். இந்தமுறை வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வாக்குகளை கேட்டு வருகின்றார்கள். எனவே மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இனவாதம், போராட்டம் வெடிக்கும் என வீர வசனம் பேசும் இவர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். இந்த தேர்தலுக்கும் தேசியம், இனவாதம் என்பவற்றுக்கு என்ன தொடர்பு? இது மக்களுக்கான அபிவிருத்தி சம்பந்தமானது.
ஒரு நாட்டின் அபிவிருத்தியில் கல்வி மருத்துவம் என்பவை முக்கியமானவை. நாம் கடந்த காலங்களில் எமது தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான கௌரவ பிரபா கணேசன் அவர்களின் தலைமையில் கல்வித்துறைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பாடசாலைகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியிருந்தோம் என்பதை கல்வி சமூகம் மறந்திருக்க வாய்ப்பில்லை. இதே போல எதிர்காலத்திலும் தரமான கல்வி, மருத்துவ, சுகாதார, போக்குவரத்து வசதிகளை மக்களுக்கு ஏற்படுத்தி கொடுப்பதற்காக மக்கள் எமது சின்னமான சேவலுக்கு வாக்களிக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஹெவலொக் டவுன் வேட்பாளர் நாகேந்திரன் டர்ஷன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கொழும்பு வாழ் மக்களுக்கு ஒரு சுபீட்சமான விடிவு வேண்டுமாயின் அதற்கு அவர்களின் சின்னத்தெரிவு சேவலாக தான் இருக்க முடியும். ஏனைய கட்சிகளை சார்ந்தவர்கள் மக்களின் வாக்குகளை சூறையாடி கடந்தகாலங்களில் எந்தவிதமான அபிவிருத்தி நடவடிக்கைகளையும் தமது உறுப்புரிமையூடாக செய்யவில்லை என்றே கூறவேண்டும் என்று தெரிவித்தார்.