தமிழ் அரசியல் கைதிகளை பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களுடன் தடுத்து வைத்துள்ளதால் அவர்கள் பாரிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
வடக்கு முதல்வரை நேற்று (திங்கட்கிழமை) முற்பகல் சந்தித்த தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள், குறித்த மகஜரை கையளித்துள்ளனர்.
குறிப்பாக கொலை, கொள்ளை, போதைவஸ்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் பாதாள உலகக் குழுவினருடன் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அரசியல் கைதிகளும் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட தீய பழக்கங்களுக்கு உள்ளாவதாகவும் அவர்களது உறவினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் இப்பிரச்சினையை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசியல் கைதிகளின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்தோடு, அரசியல் கைதிகளின் விடுதலையானது நாட்டில் நடைமுறையில் இருக்கக்கூடிய சட்டதிட்டங்களுக்கு அப்பால் இனரீதியிலான அரசியலுடன் பின்னப்பட்டு பிரித்தெடுக்கமுடியாமல் இருக்கின்றதென குறித்த மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் கடந்த வருடம் ஜனாதிபதியை சந்தித்த போது, சிறைச்சாலைகள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கு இவ்விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டது. எனினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் இவ்விடயம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.