கிளிநொச்சியில் சிறுவனை தாக்கிய குற்றச்சாட்டில் யாழ். சிறைச்சாலை அதிகாரிகள் நால்வர் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தலா ஐம்பதாயிரம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நால்வரும் நேற்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டு, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நால்வரையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி மீண்டும் மன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தை கைத்தொலைபேசியில் பதிவுசெய்த காணொளியும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 23ஆம் திகதி மாலை கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் சிறை அதிகாரிகள் பயணித்த சிறைச்சாலைப் பேருந்தும் துவிச்சக்கரவண்டி ஒன்றும் விபத்துக்குள்ளாகி இருந்த நிலையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவன் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருந்தான்.
குறித்த விபத்து ஏற்பட காரணம், துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவனின் தவறு என தெரிவித்து, சிறு காயங்களுடன் உணவகம் ஒன்றினுள் நின்ற சிறுவனை சிறை அதிகாரிகள் மனிதாபிமானம் இன்றி சரமாரியாக தாக்கியமை புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு மூலம் ஊடகங்களில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.