பொது மக்களின் காணிகளை கடற்படையினர் சுவீகரிப்பதற்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களை கடற்படையினரும், புலனாய்வாளர்களும் அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீவகத்தின் ஊர்காவற்துறை பருத்தியடைப்பில் பொது மக்களின் காணிகளை ஆக்கிரமித்து கடற்படையினர் முகாம் அமைத்துள்ளனர்.
இதனால் முகாம் அமைந்துள்ள காணி உள்ளிட்ட அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த மக்களும் அச்சம் காரணமாக வேறு இடங்களில் தங்கியுள்ளனர்.
இந் நிலையில் முகாம் அமைந்துள்ள காணி உட்பட அதனை அண்மித்த காணிகளை கடற்படையினர் சுவீகரிக்கப்ப போதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிராக அக் காணிகளின் உரிமையாளர்கள் நேற்றையதினம் போராட்டமொன்றை நடாத்தியிருந்தனர்.
இப் போராட்டத்தை நடாத்த வேண்டாமென்று கடற்படை மற்றும் புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே கூறியிருந்ததாகவும், ஆயினும் நேற்று போராட்டம் நடைபெற்ற போது அங்கு வந்த புலனாய்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதாவது போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்திருந்த புலனாய்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் நோக்கில், போராட்டத்திற்கு வந்திருந்தவர்களின் விபரங்களை கேட்டறிந்ததாகவும் அவர்களது மோட்டார் சைக்கிள் இலக்கங்களை பதிவு செய்த கொண்டு சென்றதாகவும் அந்த மக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, அக்காணியின் உரிமையாளர்களை கடற்படையினர் தமது முகாமிற்கு பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்ததாகவும், தாம் செல்லவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் கடற்படையினரின் அச்சுறுத்தல்கள் குறித்து மனித உரிமைகள் ஆனைக்குழுவிற்கும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் கூறுகின்றனர்.