தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைவாக வடக்கு கிழக்கின் அபிவிருத்திக்கென சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டதே தவிர, தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டை போல சொந்தத் தேவைக்கு அந்த நிதி ஒதுக்கப்படவில்லையென தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
கடந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்தமைக்காக, தன்னைத் தவிர கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 2 கோடி ரூபாய் அரசாங்கத்தால் வழங்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார். இக்குற்றச்சர்ட்டு தொடர்பில் தனியார் செய்திப்பிரிவிற்கு கருத்துத் தெரிவித்த போதே, மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கென அரசாங்கத்துடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதென குறிப்பிட்ட மாவை, அதன் பிரகாரம் மாற்றுத்திறனாளிகள், வீட்டுத்திட்டம் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளிட்ட 16 முக்கிய திட்டங்கள் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இவற்றை செயற்படுத்துவதற்காக சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டதாகவும், குறித்த நிதியை மாவட்ட செயலங்களே கையாள்வதாகவும் மாவை குறிப்பிட்டார்.
இந்நிலையில் சிவசக்தி ஆனந்தன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு வேதனையான விடயமென கூறிய மாவை,
இந்த பொய்யான குற்றச்சாட்டின் மூலம் கூட்டமைப்பை தோற்கடிக்க நினைப்பது தவறான விடயம் என்றும் அதற்கு சரியான பதிலை கொடுப்போம் என்றும் கூறினார்.
இக்குற்றச்சாட்டு தொடர்பாக தேர்தல் ஆணையகத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கையை எடுப்பதற்கும் ஆயத்தமாகி வருவதாகவும் மாவை சேனாதிராஜா மேலும் குறிப்பிட்டார்.