நாட்டின் அரசியல்வாதிகளில் நூற்றிற்கு 50 சதவீதமானவர்கள் மக்களின் பணத்தை திருடுகின்றனர் என்றும், இதனால் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதில் இடர்பாடுகளை எதிர்கொள்வதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவடிவேம்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி தொடர்ந்து குறிப்பிடுகையில்-
”அபிவிருத்தி அடைந்த நாடுகளைப் போல இலங்கையில் ஏன் அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியவில்லையென பலர் கேள்வி கேட்கின்றனர். எனினும், அரசியல்வாதிகளில் அரைவாசிப்பேர் மக்களின் பணத்தை திருடுபவர்களாக இருக்கின்றனர். இதனால் அபிவிருத்தியை மேற்கொள்ள முடியாதுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை மத்திய வங்கி ஊழல் மோசடியில் கோடிக்கணக்கான பணத்தை திருடியுள்ளனர். அப்பாவி மக்களின் கோடிக்கணக்கான பணத்தை திருடியவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். சம்பந்தப்பட்டவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களானாலும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கமாட்டோம்.
மேலும், யுத்தப் பாதிப்பிற்குள்ளான வடக்கு கிழக்கின் அபிவிருத்திக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றோம். அரசாங்கத்தின் இச்செயற்பாட்டிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பம் பூரண ஆதரவு வழங்கி வருகின்றது.
அத்தோடு, கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பிலும் நாம் கவனஞ்செலுத்தி வருகின்றோம்.
அபிவிருத்தியில் பின்தங்கிய மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தியை துரிதப்படுத்தி மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக புதிய அமைப்பொன்றை மாவட்டத்தில் தாபிப்போம்.
இந்த நாட்டிலே சுத்தமான அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதே எமது இலக்கு. இதற்காக எம்முடன் இணைந்து பணியாற்ற மக்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்” என்றார்.