போட்டிமிக்க உலகத்திற்கு முகம் கொடுக்கும் வகையிலும், சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும் எதிர்கால சந்ததிகளை உருவாக்குவதே எமது பிரதான நோக்கம் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு இசிபத்தான கல்லூரியில் இடம்பெற்ற, முதலாம் தரத்திற்கு மாணவர்கள் சேர்த்துக்கொள்ளும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
தற்போது இலங்கையின் கல்வித் திட்டத்தில் பல்வேறு வகையான மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளோம் இவை அனைத்தையும் அபிவிருத்தியடைந்த நாடுகளின் கல்வி நடைமுறைகளை நன்கு அவதானித்து செயற்படுத்திக் கொண்டு வருகின்றோம்.
கல்விக்காக நாம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தக் கூடும் எனினும் இவற்றினை செய்தாகவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.
அந்தவகையில் கூடிய விரைவில் க.பொ.த சாதாரண தரத்தில் இருந்து உயர்தரத்திற்கு செல்லும் அனைத்து மாணவர்களுக்கும் அதேபோன்று அனைத்து ஆசிரியர்களுக்கும் தரம்மிக்க டெப்லட் ஒன்றை வழங்கவுள்ளோம். அதற்காக 5 பில்லியன்களை கல்வியமைச்சிற்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
அதேபோன்று அனைத்து பாடசாலைகளுக்கும் மடிக்கணினிகளை வழங்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்றினையும் முன்னெடுக்கவுள்ளோம். தற்போதைய நிலையில் பாடசாலை சீருடை விடயத்தில் காணப்படும் மோசடிகளையும் நிறைவுக்கு கொண்டுவரப்படும் எனவும் அகில விராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.