இராணுத்தின் ஏற்பாட்டில் இலங்கைக்கான சீனத்தூதுவர் இன்று யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இன்று காலை 9.00 யாழ். மாநகர சபைக்குச் சென்று, யாழ். மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவைச் சந்தித்து கலங்துரையாடினர்.
யாழ் மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேலைத்திட்டங்கள் மற்றும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்துள்ளனர்.
அத்துடன், யாழ் நூலகத்திற்குச் சென்ற சீனத்தூதுவர், நூலகத்திற்கென ஒரு லட்சம் ரூபாவினை நன்கொடையாக வழங்கினார்.
அங்கு நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய சீன தூதுவர், இந்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி திட்டங்களை பாராட்டிப் பேசியதுடன் இந்தியவிற்கும் இலங்கைக்கும் இருக்கும் நெருக்கத்தையும் தெளிவுபடுத்திப் பேசினார்.
யாழ். மாவட்டச் செயலகத்திற்கு சென்ற குழுவினர், அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து சீனக்குழுவினருக்கு அரச அதிபர் விளக்கமளித்தார்.
சீனத் தூதுவரின் வருகையை முன்னிட்டு, யாழ். மாநகர சபை, யாழ். நூலகம், கச்சேரி போன்ற பகுதிகளில் பெருமளவு இராணுத்தினர் சிவில் உடையில் பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.