தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் யாழ் மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந் 116 பவுண் நகைகளைக் கொள்ளையிட்டதாகக் கூறப்படும் வழக்கொன்றில் யாழ் நீதவான் நீதிமன்றினால் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு விசாரணை நேற்று (04.01.2017) வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது சுதர்சிங் விஜயகாந்தை குற்றவாளி என உறுதிப்படுத்திய நீதிமன்று தண்டனை வழங்குவதற்காக திகதியிட்டுள்ளதோடு அவரது கைவிரல் அடையாளம் பெறுவதற்கு கட்டளையிட்டுள்ளது.
குறித்த நகைத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கொக்குவில் பகுதியில் உள்ள வங்கி உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் குறித்த 116 பவுண் நகைகள் திருடப்பட்டிருந்தன. அந்த நகைகளையே அடகு வைத்த குற்றச்சாட்டில் விஜயகாந் உட்பட நான்கு பேர் 2013 ஆம் ஆண்டு யூலை மாதம் 09 ஆம் திகதி கைது செய்யப்படு யாழ். நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
வழக்கு விசாரணைகளின் பின்னர் விஜயகாந் யூலை 25 ஆம் திகதி பொலிஸார் ஆட்சேபனை தெரிவிக்காததனால் யாழ்.மேல் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
குறித்த வழக்கில் விஜயகாந் தரப்பில், ஈபிடிபியின் சார்பில் யாழ் மாநகரசபைத் தேர்தலில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் முடியப்பு றெமீடியஸ் ஆஜராகிவந்திருந்தார். விஜயகாந் கைது செய்யப்படுவதற்கு முன்னரான காலப்பகுதியில் ஈபிடிபியின் உறுப்பினராக இருந்தவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த குற்றத்தின் பிரகாரம் 04 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை விதிப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாக தெரியவருகின்றது. இதன் மூலம் விஜயகாந் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் சிக்கல் நிலை தோன்றியிருப்பதாகவும் அவர் போட்டியிட்டு வெற்றிபெற்றாலும் பதவி இரத்துச் செய்யபடும் என்றும் கூறப்படுகின்றது.