புதிதாக சாதாரண கிணறுகள் அல்லது குழாய் கிணறுகளை தோண்டுவோர் ஆண்டுக்கான அனுமதிக் கட்டணமாக நீர்வளசபைக்கு 7,500 ரூபாவிலிருந்து 15,000 ரூபாவரை செலுத்தவேண்டிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அங்கீகாரத்தை பெறுவதற்கு அமைச்சரவை பத்திரம் ஒன்று விரைவில் சமர்ப்பிக்கப்படும் என நீர்வளசபையின் தலைவர் பந்துல முனசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள நீர்வளசபை சட்டத்திற்கு திருத்தங்கள் பல கொண்டுவரப்படவுள்ளன. இதன்படி 12 அடிக்கு கூடிய விட்டமுள்ள கிணறு தோண்டுவதற்கு முன் அனுமதி பெறவேண்டியிருக்கும்.
குடிநீரை போத்தலில் அடைக்கும் நிறுவனங்கள் அவை பயன்படுத்தும் நீரின் அளவுக்கு ஏற்ப நீர்வளசபைக்கு காப்புரிமை பணம் செலுத்தவேண்டும்.
குழாய் கிணறு அமைக்கும் நிறுவனங்கள் பதிவுக் கட்டணமாக 15,000 ரூபாவும் அதை ஆண்டுதோறும் புதுப்பிப்பதற்காக 10,000 ரூபாவும் கட்டவேண்டும்.
ஆறுகள், குளங்கள், அருவிகள், வாய்க்கால்கள், நிலவடிநீர் என்பவற்றை மாசடையாது பாதுகாப்பதற்கு கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும்.
அடுத்த 40, 50 வருடங்களில் சுத்தமான நீர் மிகவும் பெறுமதி வாய்ந்ததாகவும் அருமையானதாகவும் ஆகிவிடும். காலம் கடக்கும் முன் எதிர்கால சந்ததிக்காக இதை பாதுகாத்து வைத்திருப்பது இப்போதைய தலைமுறையின் பொறுப்பாகும் என நீர்வள சபையின் தலைவர் பந்துல முனசிங்க கூறினார்.