யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையின் விகாராதிபதின் உடலை தகனம் செய்வதற்கு யாழ்.நீதிவான் நீதிமன்றம் அனுமதிவழங்கி உத்தரவிட்டது.
யாழ்ப்பாணம் – ஆரியகுளம் நாக விகாரையின் விகாராதிபதி உயிரிழந்துள்ள நிலையில் அவரது உடலினை யாழ்.முற்றவெளிப் பகுதியில் தகனம் செய்வதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி சட்டத்தரணி மணிவண்ணன் மற்றும் 12 சட்டத்தரணிகள் முன்னிலையாகி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எதிராளிகள் ஐவரையும் பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு யாழ்.நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது
குறித்த நாக விகாரையின் விகாரதிபதி மேகாஜதுரே ஜானரத்ன தேரர் கடந்த 19ஆம் திகதி கொழும்பு வைத்தியசாலையில் உயிரிழந்தார்.அவரது உடல் விமானம் மூலம் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டு ஆரியகுளம் நாகவிகாரையில் வைக்கப்பட்டிருந்தது.
அவரது உடலினை இன்றைய தினம் பிற்பகல் 2 மணியளவில் தகனம் செய்வதற்கு யாழ்.இராணுவ படைத் தலைமையகம் ஆரியகுள நாக விகாரையினருடன் இணைந்து ஏற்பாடுகளை முன்னெடுத்தது.
இந்நிலையில் குறித்த பகுதியில் எரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி தாக்கல் செய்த வழக்கானது இன்று நண்பகல் 12.30 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.முனீஸ்வரர் ஆலயம் யாழ்.கோட்டை தமிழர் ஆராய்ச்சி மாநாட்டின் நினைவுத் தூபி, பொது நூலகம், பொதுச் சந்தை, எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் வைத்தியசாலை உள்ளிட்ட மக்கள் அதிகளவில் கூடும் இடங்கள் காணப்படுவதால், அந்த இடத்தில் தகனம் செய்யக்கூடாது எனவும், பொது இடத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு எனவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதன்போது அவ் வழக்கின் இடை நகர்த்தல் பத்திரத்தின் மீதான விசாரணையின் போது குறித்த வழக்கின் எதிராளிகளான யாழ்.மாநகர சபை ஆணையாளர், யாழ்.பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பரிசோதகர், யாழ்.மாநகர சபையின் சுகாதார பரிசோதகர், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி, ஆரியகுள நாக விகாரையின் விகாராதிபதி ஆகியோரை மன்றில் முன்னிலையாகுமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ்கரன் கட்டளை பிறப்பித்திருந்த நிலையில் அனைவரும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது,
விகாராதிபதியின் உடல் எரிக்கப்படும் இடம் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான இடமெனவும் இந்தத் தகனக் கிரிகையைத் தடுத்தால், அமைதியின்மை உருவாகும் எனவும் அங்கு விகாராதிபதியின் உடலை எரிப்பதற்கு அத் திணைக்களத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் இறுதிக்கிரியைகளை இராணுவம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் மன்றில் முன்னிலையாகியிருந்த பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் வழக்குத் தொடுநர் தரப்பால் குறித்த பகுதியில் யாழ்.கோட்டை தமிழர் ஆராய்ச்சி மாநாட்டின் நினைவுத் தூபி, பொது நூலகம், பொதுச் சந்தை மற்றும் முனீஸ்வரர் ஆலயம் என்பன உள்ள நிலையில் எரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த நீதிமன்ற நீதிவான் எஸ். சதீஸ்கரன், விகாராதிபதியின் உடலை அங்கு தகனம்செய்வதற்கு அனுமதியளித்து உத்தரவிட்டார்.
தேரரின் உடலம் ஆரியகுளம் நாகவிகாரையில் இருந்து ஊர்வலமாக நகரின் ஊடாக முற்றவெளிக்கு எடுத்து வரப்பட்டு இன்று மாலை பெருமளவிலான சிங்களமக்கள் மற்றும் இராணுவத்தினர் பொலிசார் தேரர்கள் மத்தியில் கிரியைகள் நடைபெற்று அவ்விடத்தில் தகனம் செய்யப்பட்டது.
நிகழ்வில் மும்மத குருமாரும் கலந்துகொண்டனர். வடக்கு ஆளுனர் மற்றும் மாவட்ட முப்படைத்தளபதிகளும் கலந்து கொண்டனர் . பொதுபல சேனா ஞானசார தேரரும் கலந்துகொண்டார். இது தொடர்பில் தமிழ்மக்கள் மத்தியில் பலத்த எதிர்வலைகள் கிளம்பியுள்ளது.