யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதிக்குள் நுழைந்த வாள்வெட்டுக் குழுவினர், அப்பகுதி மக்களால் துரத்தித் துரத்தி தாக்கப்பட்டுள்ளனர்.
யாழ். மக்களை அண்மைய காலமாக அச்சுறுத்தி வரும் வாள்வெட்டுக் குழுவினர், நேற்று முன்தினம் (சனிக்கிழமை) வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சகிதம் கோண்டாவில் பகுதிக்குள் நுழைந்தனர்.
இதன்போது ஊர்மக்கள் ஒன்றிணைந்து வாள்வெட்டுக் குழுவினரை சரமாரியாக தாக்கி விரட்டியுள்ளனர். இதற்கு ஈடுகொடுக்க முடியாத வாள்வெட்டுக் குழுவினர் வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை விட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் கோப்பாய் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் சந்தேகநபர்களை தேடும் நடவடிக்கையை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் பொதுவாக இரவு நேரங்களில் இவ்வாறு மக்கள் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் கடைகளுக்குள் புகும் வாள்வெட்டுக் குழுவினர், மக்கள் மீது வாள்வெட்டு நடத்திச் செல்வதோடு பொருட்களுக்கும் சேதம் விளைவிக்கின்றனர். அண்மையில் பணம் மற்றும் நகைகளையும் இக்குழுவினர் திருடிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் வாள்வெட்டுக்குழுவைச் சேர்ந்த இருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கோண்டாவில் பகுதியிலுள்ள கடையொன்றில் கொள்ளையிட முயற்சித்த சந்தர்ப்பத்தில் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கொக்குவில் மற்றும் கோண்டாவில் பகுதிகளைச் சேர்ந்த 18 மற்றும் 22 வயதான இருவரே கைதாகியுள்ளனர். இவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் வாள்வெட்டுக் குழுவினர் அட்டூழியங்களில் ஈடுபட்டதோடு, நகைகளும் பணமும் கொள்ளையிட்டுச் செல்லப்பட்டன. குறித்த சம்பவங்களுடன் இவர்களுக்கும் தொடர்பிருக்கலாமென சந்தேகிக்கும் பொலிஸார், தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.