யாழ்ப்பாணத்தில் அண்மைய காலமாக இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இக்ரம் உள்ளிட்ட ஆறு பேரின் விளக்கமறியலில் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களை எதிர்வரும் 28ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ். நீதவான் நீதிமன்றம் நேற்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி தேடுதல் நடவடிக்கையில், கடந்த மாதம் 28ஆம் திகதி கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதியில் இக்ரம் உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்கள் வழங்கிய தகவலின் பிரகாரம், அதற்கு மறுநாள் வவுனியாவில் வைத்து மூவர் கைதுசெய்யப்பட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னரும் யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் வாள்வெட்டுச் சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு, விசேட அதிரடிப்படையின் ரோந்தும் அவ்வப்போது இடம்பெறுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கிடைக்கின்றன.