தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் பொலித்தீன் பாவனையை தடை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
பொலித்தீன் பாவனையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்டத்தினை தீவிரமாக நடைமுறைப்படுத்தவும் ஜனாதிபதி மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக எதிர்காலத்தில் ஊடக கலந்துரையாடல் ஒன்றினை ஒழுங்குசெய்து உரிய தரப்பினரை அறிவுறுத்துமாறும் ஜனாதிபதி மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
உள்ளூராட்சி நிறுவனங்களில் கழிவு முகாமைத்துவத்தினை முறைப்படுத்தல் தொடர்பாக நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.
கழிவு முகாமைத்துவம் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காண்பதனை எந்த வகையிலும் தாமதிக்க முடியாது என வலியுறுத்திய ஜனாதிபதி , பிரச்சினைகள் காணப்படுமாயின் துரிதமாக அவற்றை தமக்கு முன்வைக்குமாறும் உரிய துறையினருக்கு ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தினார்.
தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள கழிவு முகாமைத்துவ செயற்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், சகல உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் டிரெக்டர்களைக் கொள்வனவு செய்வதற்கான செயற்திட்டத்தின் முன்னேற்றம், கழிவு முகாமைத்துவ வழிகாட்டல்களுக்கேற்ப செயற்படுதல், திண்மக்கழிவு முகாமைத்துவத்திற்கான தேசிய மட்ட திட்டம் என்பன தொடர்பாக இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.
பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையை முகாமை செய்தல் பற்றிய அமைச்சரவைத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மருத்துவக் கழிவுப் பொருட்கள் உட்பட மருத்துவமனை வளாகத்தில் கழிவு முகாமைத்துவத்திற்கு முறையான திட்டம், இலத்திரனியல் கழிவுப்பொருள் முகாமைத்துவத்திற்கு முறையான திட்டம், நீரோடைகள் மற்றும் ஆறுகளில் கழிவு நீரும் கழிவுப்பொருட்களும் சேர்வதனைத் தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் செயற்திட்டமொன்றினைத் தயாரித்தல் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
அமைச்சர்கள் ராஜித்த சேனாரத்ன, பைஸர் முஸ்தபா, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி, பெரு நகரங்கள், மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.