தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பமான சூழல் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது என வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) வறுமை நிலையில் உள்ள மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கும் நிகழ்வின் பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
“கூட்டமைப்பில் தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் அனைத்தையும் அமைதியாக இருந்து அவதானித்துக்கொண்டு இருக்கின்றேன். இப்போதைய குழப்பமான சூழல் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது .
எங்களை அழிக்கும் போது மைத்திரி, மஹிந்த மற்றும் ரணில் என அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டார்கள். ஆனால் தற்போது நாங்கள் ஒன்று பட்டு இருக்க வேண்டும்.
காலம் மற்றும் நேரத்தை வைத்து தான் எமது நிலைப்பாடுகள் மாற்றம் பெறலாம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிளவை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.