பொதுமக்களின் காணிகளை இராணுவம் சுவீகரித்துள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசென்று உரிய தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அமைச்சர் பீரிஸ், இன்று மாவட்டச் செயலகத்தில் சிவில் சமூக பிரதிநிகளைச் சந்தித்து யாழ் மாவட்டத்தின் நிலைப்பாடு குறித்து கலந்துரையாடினார். இதன்போது அவர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு பதிலளித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொதுமக்களின் காணிகளை இராணுவத்தினர் அபகரித்துள்ளதால் இடம்பெயர்ந்துள்ள அம்மக்களை அவர்களின் சொந்த இடங்களில் எவ்வாறு மீள்குடியேற்ற முடியும் என்று சிவில் சமூகத்தினர் வெளிவிவகார அமைச்சரிடம் இதன்போது கேள்வி எழுப்பினர்.
யுத்தம் முடிந்து மூன்று வருடங்களை கடந்த நிலையிலும் மக்கள் இன்னமும் தனியார் காணிகளில் உள்ள முகாம்களில் தங்கியுள்ளனர். இவ்வாறு தங்கியுள்ள மக்களை முகாம் அமைந்துள்ள காணியின் உரிமையாளர் வெளியேறுமாறு கோரிக்கை விடுத்துவரும் நிலையில் இங்கிருக்கும் மக்கள் எங்கே சென்று குடியேறுவது.
அம்மக்களின் காணிகளை இராணுவம் ஆக்கிரமித்து உயர்பாதுகாப்பு வலயமாக மாற்றியுள்ளதால் மக்கள் தமது சொந்த நிலங்களில் குடியேற முடியாத நிலை காணப்படுகின்றது.
நீதிமன்றங்கள், தனியார் காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளபோதும் இது தொடர்பான எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தொடர்ந்தும் மக்கள் அகதிவாழ்கை வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என அவர்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.
இதற்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.