இப்போது யுத்தம் இல்லை. ஆனால், இலங்கை அரசாங்கம் சத்தம் இல்லாமல் தமிழ்ச் சிறுபான்மை இனத்தைப் பெரும்பான்மைக்குள் கரைத்து, முழு இலங்கையையும் பௌத்த சிங்கள நாடாகக் கட்டமைக்கும் முயற்சியை இப்போதும் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. அரசாங்கம் எமக்கான தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கத் தவறினால், எமது பிரதேசத்தை ஆட்சி செய்யும் அரசியல் அதிகாரத்தை எங்களிடம் தரத்தவறினால், நாங்கள் இப்போது கைகட்டி நின்றாலும் அடுத்த தலைமுறை ஆயுதம் தூக்குகின்ற நிலை நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் வடமாகாண சபை உறுப்பினருமான பொ.ஜங்கரநேசன் எச்சரித்துள்ளார்.
வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் மரநடுகை மாத விழா சங்கிலியன் பூங்காவில் கடந்த சனிக்கிழமை (18.11.2017) நடைபெற்றது. இவ்விழாவுக்குத் தலைமை வகித்து உரையாற்றியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது,
நான் சந்தித்த ஒரு அம்மையார் தனது பேரக்குழந்தை துப்பாக்கிப் பொம்மையுடனேயே விளையாட விரும்புவதாகவும் அவர் ஒரு முன்னாள் போராளி என்றும் குறிப்பிட்டார். அதற்குப் பதிலாக, எல்லாக் குழந்தைகளுக்குமே துப்பாக்கிகள் மீது விருப்பம் அதிகம் என்று நான் சொன்னேன். ஆனால், அவர் அதற்குப் பின்னர் சொன்னவை எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
தாங்கள் போராளி குடும்பம் என்றும், இதன் காரணமாகத் தாங்கள் பட்ட அவலம் இனிமேல் தங்கள் குடும்பத்தில் யாருக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று பேராட்டத்தின் வாடையே தெரியமலேயே பேரப்பிள்ளையை வளர்த்து வருவதாகவும், அவரின் முன்னால் போராட்டத்துடன் தொடர்புடைய எந்த விடயங்களையும் ஒருபோதும் பேசுவதில்லை என்றும் தெரிவித்தார். ஆனால், பேரப்பிள்ளை பேசும் பேச்சுகள் தங்களுக்குப் பயத்தை ஏற்படுத்துவதாகவும், ஒரு தடவை நெடுந்தீவுக்கு போனபோது படகில் கடற்படையினரைப் பார்த்த பேரன், இவர்கள் ஏன் எங்களுடன் வருகிறார்கள். இவர்களைச் சுடுவதற்கு அல்லவா நாங்கள் நினைத்திருந்தோம் என்று கூறியதாகவும் தெரிவித்தார். இப்படிப் பல சம்பவங்களைச் சொன்ன அவர் தனது பேரப்பிள்ளை தங்கள் குடும்பத்துடன் நெருங்கிப் பழகி வீரச்சாவடைந்த ஒரு போராளியின் மறுபிறப்பாக இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
நாங்கள் கிட்டு பூங்காவில் இந்த நிகழ்சியை நடாத்திக்கொண்டிருக்கிறோம். மாவீரர்கள் நினைவு நிகழ்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. போரில் பயந்து உறைந்த இந்தத் தலைமுறை இதற்குமேல் நகரத் துணியாது என்று அரசாங்கம் கருதலாம். ஆனால், வருங்காலத் தலைமுறை அவ்வாறு இருக்காது. நான் குறிப்பிட்ட அம்மையார் சொன்ன மறுபிறப்பு நம்பிக்கை விவாதத்துக்கு உரியதாக இருக்கலாம். ஆனால், அரசாங்கம் எமக்கான சரியான அரசியல் தீர்வைத் தராமல் எங்களைத் தொடர்ந்தும்; அடக்கி ஆள நினைத்தால் அடுத்த தலைமுறைகள் ஆயுதம் தூக்குவது தவிர்க்க இயலாது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
வடக்கின் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட இந் நிகழ்ச்சியில் விவசாய அமைச்சர் க. சிவநேசன், ஆளுநரின் செயலாளர் இ. இளங்கோவன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட உதவிப் பதிவாளர் இ. சர்வேஸ்வரா, இமை நிறுவனத்தின் செயலாளர் மகேசன் கஜேந்திரன் ஆகியோரும் உரையாற்றியிருந்தனர்.