இழந்த அதிகாரத்தை மீளப்பெற்றுக் கொள்வதற்கான ஒரு மார்க்கமாக அரசியலமைப்பினைப் பயன்படுத்த வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வரவுசெலுவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மஹிந்தவிடம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ”புதிய அரசியலமைப்பினை எதிர்ப்பதாக இருந்தால், அது குறித்த பிரேரணைக் கொண்டுவரப்பட்ட போதே, எதிர்த்து வாக்களித்திருக்க வேண்டும். அதைவிடுத்து, மக்கள் மத்தியில் இன முரன்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில், செயற்படக் கூடாது.
எனவே நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தவும், இனப்பிரச்சினைக்கு தீர்வினைக் காண எடுக்கும் முயற்சிக்குமான, புதிய அரசியலமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய கடப்பாடு மஹந்தவிற்கு இருக்கிறது.
நாங்கள் சுதந்திரக் கட்சிக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்கள் எங்களையும் எதிராகக பார்க்க வேண்டியதில்லை.
தற்போது, உள்ளூராட்சி தேர்தலுக்கு நாடு முகம்கொடுத்துள்ளது. இதில் அரசைக் கவிழ்க்க வேண்டிய தேவை மஹிந்தவிற்கு இருக்கிறது. அது அவருடைய அரசியல். அது குறித்து யாரும் தவறு கூற முடியாது.
எனினும் இழந்த அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக அவர் அரசியலமைப்பைத் தயாரிக்கும் செயற்பாடுகளை, ஒரு மார்க்கமாக பயண்படுத்திக் கொள்ளக் கூடாது” என தெரிவித்துள்ளார்.