உள்ளூராட்சிமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்புடன் இணைந்து செயற்படுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராகவிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் இணைந்து சுதந்திர கட்சியாக தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ளோம். அதற்கான முயற்சிகளில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஈடுபட்டு வருகிறார்.
இரண்டு பிரிவுகளாகக் காணப்படும் கட்சியை ஒன்றிணைக்க நாம் கடுமையாக உழைத்து வருகிறோம். அதன்படி இரண்டு பிரிவுகளை ஒன்றிணைப்பதற்கு தயாராகவிருப்பதாகவும், அதற்காக வேண்டிய தியாகத்தை செய்ய தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
எனவே, ஓரிருவர் சொல்வதை கேட்காது இணைந்து போட்டியிடுவது குறித்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானிக்க வேண்டும்.
இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் கலந்துரையாட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதேவேளை, அவ்வாறு ஒன்றிணைந்து செயற்படும் பட்சத்தில் தேர்தல் சின்னம் எதுவாக அமையும் என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அது அனைவரும் ஒன்றிணைந்த பின்னர் தீர்மானிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.