ஜெனீவாவில் இலங்கை மீண்டும் வாக்குறுதி அளித்தது

ஜெனீவா பிரேரணையை அமுல்படுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாக பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற சர்வதேச காலக்கிரம மீளாய்வு அமர்வில் இலங்கை சார்பில் கலந்து கொண்டு உறுப்பு நாடுகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “ஜெனீவா மனித உரிமைப்பேரவையில் கடந்த 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையின் இலக்கை நோக்கியே நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுவே எமது நல்லிணக்கப் பொறிமுறையின் முக்கிய அம்சமாகும். இதற்காக 140 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நல்லிணக்கத்துக்காகவே நாம் இம்முறை முதலீடு செய்திருக்கின்றோம். குறிப்பாக நீண்டகால சமாதானம், பாதுகாப்பு, உறுதித் தன்மை மற்றும் நல்லிணக்கத்துக்காக முயற்சிக்கின்றோம். இன்னும் செய்ய வேண்டியது பல இருக்கின்றன என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். துரதிஷ்டவசமாக நாம் முன்னெடுக்கும் நல்லிணக்க செயற்பாடுகளின் செல்லுபடித்தன்மை சவாலுக்கு உட்படுகின்றது. நாம் மனித உரிமையையும் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கும்போது எதிர்தரப்புகள் சர்வதேச தலையீட்டை கோரி எம்மை எதிர்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.

Related Posts