யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இளைஞன் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இவர்கள் இருவரும் நேற்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் கடந்த மாதம் 22ஆம் திகதி டொன் பொஸ்கோ (வயது-24) என்ற இளைஞன், இனந்தெரியாதோரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பான விசாரணை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் சென்ற விசேட விசாரணைக் குழுவினர் யாழ். பண்ணை பகுதியிலுள்ள விசேட அதிரடிப் படையினரின் முகாமில் தேடுதல் நடத்தினர்.
கொலை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பதிவாகிய சீ.சீ.ரி.வி. காணொளியில் காணப்பட்ட முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கைத்துப்பாக்கி என்பன இதன்போது கைப்பற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையிலேயே நேற்றய தினம் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட STF அதிகாரிகள் இருவரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நிதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்
அரியாலை இளைஞனின் படுகொலை தொடர்பான பின்னணி மர்மமாகவே இருந்து வந்த நிலையில், தொடரும் விசாரணைகளில் உண்மை வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.