வடகொரியாவால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அணுகுண்டுச் சோதனையைத் தொடர்ந்து, 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என, ஜப்பானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அணுகுண்டுச் சோதனை மேற்கொள்ளப்பட்ட சுரங்கம் இடிந்து வீழ்ந்ததிலேயே, இவ்வுயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என அறிவிக்கப்படுகிறது.
ஜப்பானின் 6ஆவது அணுகுண்டுச் சோதனை, செப்டெம்பர் 3ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையே, வடகொரிய வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய அணுச்சோதனையாகக் கருதப்பட்டது.
ஆனால், இச்சோதனையின் போது, அது மேற்கொள்ளப்பட்ட சுரங்கம் இடிந்து வீழ்ந்தது என, முன்னரே செய்தி வெளியாகியிருந்தது. எனினும் மேலதிக தகவல்கள் கிடைத்திருக்கவில்லை. இந்நிலையிலேயே, நேற்று செய்தி வெளியிட்ட ஜப்பானிய ஊடகமான அசாஹி, செப்டெம்பர் 10ஆம் திகதியளவில், ஆரம்பகட்டமாக அச்சுரங்கம் இடிந்து வீழ்ந்தபோது, 100 பணியாளர்கள் கொல்லப்பட்டனர் எனத் தெரிவித்தது. அதன் பின்னர், மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சுமார் 100 பணியாளர்கள், இன்னொரு தரம் அச்சுரங்கம் இடிந்ததைத் தொடர்ந்து பலியாகினர் என்று அறிவிக்கப்படுகிறது. வடகொரியத் தகவல் மூலங்களை அடிப்படையாகக் கொண்ட, இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
வடகொரியாவால் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை, 6.3 றிக்டர் அளவிலான பூமியதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, வடகொரியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில், கதிரியக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையிலேயே, அழிவுகள் தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்தோடு, இந்த அழிவின் காரணமாக, இச்சோதனை மேற்கொள்ளப்பட்ட பகுதியில், மீண்டும் ஒரு தடவை அணுகுண்டுச் சோதனை மேற்கொள்ளப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என, நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஜப்பானிய ஊடகத்தால் வெளியிடப்பட்ட இத்தகவல் தொடர்பாக, வடகொரியத் தரப்பிலிருந்து, இதுவரையில் தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை.