தமிழ் அரசியல் கைதிகளின் துரிதமான விடுதலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் மாகாணசபை உறுப்பினர்களையும் கலந்துரையாடலுக்கு வருமாறு யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.
03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 02 மணிக்கு யாழ் பல்கலைக்கழக முன்றலில் இக் கலந்துரையாடல் நடைபெறும் எனவும் மாணவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுவரும் மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி யாழ்.பல்கலைகழகத்தின் அனைத்து செயற்பாடுகளையும் முடக்கி மூன்றாவது நாளாகவும் நேற்றைய தினம் (01) மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இப்போராட்டத்தின் போதே வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இப் பகிரங்க அறிவிப்பை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மாகாணசபை உறுப்பினர்களுக்கும் அவர்கள் அனுப்பி வைத்துள்ள கடித்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியமாகிய நாம் அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் மூன்று அரசியல் கைதிகளின் உடனடிக் கோரிக்கைகள் மற்றும் ஏனைய அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் உரித்தும், உரிமையும் உள்ள மாணவர் என்ற வகையில் பல போராட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றோம்.
தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டு அவர்களுடைய பிரச்சனைகளை பாராளுமன்றம் வரை எடுத்து செல்லும் வரை உரிமையினை பெற்றவர்கள் நீங்கள் என்ற முறையில் அரசியல் கைதிகள் தொடர்பாக உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை யாழ்.பல்கலைகழகத்தின் மாணவர் ஒன்றியத்துடன் கலந்துரையாடி இறுதி தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டி உங்களை அழைக்கின்றோம்.
03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 02 மணிக்கு நடைபெறும் இக் கலந்துரையாடலில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளையும் சார்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம். இவ் அழைப்பினை உதாசீனம் செய்பவர்கள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை உதாசீனம் செய்பவர்களாக கருதப்படுவார்கள்- என்றுள்ளது.
இதேவேளை யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் பல்கலைகழக செயற்பாடுகளை முடக்கிய போராட்டத்திற்கு பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களாகிய 19 அமைப்புக்கள் தமது ஆதரவனையும் வழங்குவதாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.