பேருந்துகளில் இருக்கைகளுக்கு ஏற்றவாறு பயணிகளை ஏற்றும் நிலையை உருவாக்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளும் கட்சி உறுப்பினர் இமானுவேல் ஆர்னோல்ட் இன்று வலியறுத்தினார்.
வடமாகாண சபையின் 108ஆவது அமர்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“வடக்கு மாகணத்தில் சேவையில் ஈடுபடும் பெரும்பாலான பேருந்துகளில் இருக்கைகளுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி செல்கின்றார்கள். அதனால் பயணிகள் பேருந்தில் மிதிபலகைகளில் பயணம் செய்கின்றார்கள்.
இருக்கைகளுக்கு ஏற்றவாறு பயணிகளை ஏற்றும் வகையில் பேருந்து சேவைகள் இடம்பெற வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கைகளை மாகாணப் போக்குவரத்து அமைச்சு எடுக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
அதன் போது கருத்து தெரிவித்த மற்றுமொரு ஆளும் கட்சி உறுப்பினரான த. குருகுலராஜா, “யாழ்.- கொழும்பு பேருந்து சேவைகள் உரிய முறையில் நடைபெறுகின்றன. அதேபோல ஏனைய மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்து சேவைகளும் சீராக நடைபெறவேண்டும்” என்றார்.
எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா கருத்து தெரிவிக்கும் போது , “கடந்த நான்கு ஆண்டுகளாக போக்குவரத்து அமைச்சை ஆளும் கட்சி வைத்திருந்தும் நடவடிக்கை இல்லை என்று குற்றம்சாட்டினார்.