இலங்கையில், திங்கட்கிழமைகளில் இறைச்சி தடை செய்யப்பட வேண்டுமெனக் கோரியுள்ள நான்கு பௌத்த மற்றும் விலங்கு உரிமைகள் நிறுவனங்கள், வெசாக் வரும் மே மாதத்தில் விலங்குணவுகள் உண்பதை, சகல பௌத்தர்களும் தவிர்க்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளன.
அநகாரிக தர்மபால மனிதாபிமான நிறுவனம், விலங்குகளுக்கான தர்மத்தின் குரல், போதிராஜா நிறுவனம், இளைஞர் அகிம்சை இயக்கம் என்பவற்றின் தலைவர்களே, இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக ஊடச் சந்திப்பு, கொழும்பில் நேற்று இடம்பெற்றது.
“சகல இலங்கையரும், திங்கட்கிழமைகளில் மாமிசம் புசிப்பதை நிறுத்த வேண்டும். மே மாதம் முழுவதும் சகல பௌத்தர்களும் தாவர போசணிகளாக வேண்டும். இது, இலங்கையை மாமிசம் இல்லாத நாடாக மாற்றுவதற்கான முதற்படி ஆகும்” என, அவர்கள் தெரிவித்தனர்.
இதன்போது, விலங்குகளுக்கான தர்மத்தின் குரல் அமைப்பின் உறுப்பினரான வண. பேராதெனிய சதிந்திரிய தேரர் கருத்துத் தெரிவிக்கையில்,
“2013ஆம் ஆண்டில், 200,000 மாடுகள், இறைச்சிக்காகக் கொல்லப்பட்டன. இது, 2016ஆம் ஆண்டில் 170,000ஆகக் குறைந்தது.
“மட்டக்களப்பிலும் அம்பாறையிலும், மாடறுப்பு அதிகமாக உள்ளது. இறைச்சி நுகர்வு, புற்றுநோய்க்கும், தொற்றுநோய்களுக்குமான பிரதான காரணம் என, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது” என்றார்.
சிவப்பு இறைச்சியை உண்பது, புற்றுநோய் ஏற்படுவதைப் பங்களிக்கலாம் என, உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிடுகின்ற போதிலும், அதுவே பிரதான காரணம் எனக் குறிப்பிடவில்லை. உலக சுகாதார ஸ்தாபனத்தின் குறித்த அறிக்கையை அவர், இங்கு தவறாகக் குறிப்பிட்டிருந்தார் என்பது, இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை, வண. அஹன்கம ஆனந்த தேரர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
“மாடு வெட்டுதலைத் தடை செய்யக் கோரிய 2,600 புத்த ஜயந்தியின்போது, அண்ணளவாக ஒரு மில்லியன் மக்கள் கையொப்பமிட்ட மனு செயற்படுத்தப்படவில்லை. புத்த ஜயம்பதியின்போது, பொதுமக்களுக்கு நாம் காட்டி வீடியோக் காட்சிகளைப் பார்த்த கத்தோலிக்க, முஸ்லிம் குருமார்களும் எம்மோடு சேர்ந்து அந்த மனுவில் கையொப்பமிட்டார்கள்” என்றார்.