வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அதிகாரத்துக்குட்பட்ட எல்லைகளில் உள்ள ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்விநடத்த முற்றாகத் தடைசெய்யப்படுவதாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று கட்டளையிட்டார்.
குடாநாட்டு ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்ளி நடத்துவதற்கு தடை உத்தரவு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நீதிப் பேராணை மனு இந்து மகா சபையால் முன்வைக்கப்பட்டது. அதனை சட்டத்தரணி வி.மணிவண்ணன் முன்வைத்திருந்தார்.
இந்த வழக்கு 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இடம்பெற்றுவந்தது. அன்று தொடக்கம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வேள்வி நடத்தப்படும் ஆலயங்களுக்கு அதனை நடத்துவதற்கு இடைக்காலத் தடையை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிவந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
“ஆலயங்களின் இடம்பெறும் மிருகபலியிடலைத் தடுக்கும் அதிகாரம் உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் மாகாண மேல் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. அதனடிப்படையில் வடக்கு மாகாண முதலமைச்சரின் ஆளுகைக்கு உள்பட்ட எல்லைக்குள்ள உள்ள ஆலயங்களின் மிருகபலியிட்டு வேள்வியை நடத்த முற்றாகத் தடை வழங்கிக் கட்டளையிடப்படுகிறது.
இந்தக் கட்டளை மல்லாகம் நீதிவான் மன்றுக்கும் வேள்வியை நடத்தும் ஆலயங்களுக்கும் அனுப்பிவைக்க மன்று உத்தரவிடுகிறது” என்று யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டார்.