முச்சக்கரவண்டிகளில் கட்டணத்துக்கான வாசிப்புமானி பொருத்தப்படுவது அவசியம் ஆகும். 35வயதிற்கு குறைந்த நபர்கள் வாடகைக்கு முச்சக்கரவண்டிகளை செலுத்தாத வகையில் சட்டங்கள் கொண்டுவரப்படும் என்றும் சிவில் மற்றும் விமானசேவைகள் அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மோட்டார் வாகன சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பான விவாத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
அமைச்சர் இதுதொடர்பாக தெரிவிக்கையில்,
முச்சக்கரவண்டி ஒழுங்குறுத்தலுக்கான விடயங்கள் பல இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. வீதியை பயன்படுத்துவோரை சிரமங்களுக்கு உள்ளாக்காதவகையில் வாகனஒலி பயன்படுத்துதல் என்பன இதில் இடம்பெற்றுள்ளன.
முச்சக்கரவண்டிகளில் கட்டண அறவீட்டுக்கான மாணி பொருத்தப்படல் வேண்டும். பயணிப்போர், பயணத்திற்கான பற்றுச்சீட்டுகோரும் பட்சத்தில் அவை வழங்கப்படவேண்டும். கட்டணங்களை கட்டுப்படுத்துவதற்கு முறையொன்றையும் நாம் தயாரித்துள்ளோம்.
முச்சக்கரவண்டிகளில் பலவகையான சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. இவை வீதியில் செல்வோரின் கவனத்தை ஈர்க்ககூடியதாக உள்ளது. தேவையற்ற சித்திரங்கள் காட்சிப்படுத்தக்கூடாது. இதன்காரணமாக முச்சக்கரவண்டி விபத்துக்கள் அதிகரிக்கின்றன. வீதி விபத்துக்களும் ஏற்படுகின்றன.
2007ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரையில் இடம்பெற்ற வீதி விபத்துக்களின் எண்ணிக்கை 3இலட்சத்து 66 ஆயிரத்து 167 ஆகும். இவற்றுள் 25ஆயிரத்து 624பேர் உயிரிழந்துள்ளனர்.
வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தில் உயிரிழந்த எண்ணிக்கையிலும் பார்க்க இது அதிகமாகும். விசேடமாக ரயில் கடவைகளில் இடம்பெறும் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. ரயில் கடவைகளில் கவனத்தில் கொள்ளாது வாகனங்களை செலுத்துவோருக்கு 25ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்படும்.
18வயது நிரம்பியதும் முச்சக்கரவண்டியை கொள்வனவு செய்கின்றனர். எதிர்காலத்தில் 35 வயதிற்கும் குறைந்தவர்கள் முச்சக்கரவண்டியை வாடகைக்கு செலுத்துவதற்கு அனுமதி வழங்காது இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
தற்பொழுது முச்சக்கரவண்டிகளை பெற்றுக்கொள்வோருக்காக எதனையும் செய்வதற்கில்லை. நாட்டில் ஒருமில்லியனுக்கு மேற்பட்ட முச்சக்கரவண்டிகள் உண்டு. வீதிகளால் இதற்கு ஈடுகொடுக்க முடியாது. முச்சக்கரவண்டிகள் தரிப்பிடங்களில் அளவுக்கதிகமாக நிறுத்தப்படுகின்றன. பஸ்வண்டிகளும் அவ்வாறே. இதனால் சுற்றாடலுக்கு பாதிப்பேற்படுகின்றது. மின்சாரத்தில் இயங்கக்கூடிய கார் பஸ் முச்சக்கரவண்டிகள் இறக்குமதி செய்யப்படவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.