Ad Widget

யாழ். பல்கலைக்கழக சமூகத்திற்கு, பூட்டிய சிறையில் இருந்து ஓர் அன்புரிமை வேண்டுகோள்!

தமது விடுதலைக்கான பெரும் பொறுப்பை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் பொறுப்பெடுக்கவேண்டும் என தமிழ் அரசியல் கைதிகள் யாழ் பல்கலைக்கழக சமூகத்துக்கு கண்ணீர்க் கடிதம் அனுப்பியுள்ளனர்.

“யாழ். பல்கலைக்கழக சமூகத்திற்கு, பூட்டிய சிறையில் இருந்து ஓர் அன்புரிமை வேண்டுகோள்!” எனத் தலைப்பிட்டு பல்கலைக்கழகத் துணைவேந்தர், பீடாதிபதிகள், துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள், அனைத்துப்பீட மாணவர் ஒன்றியத்தினர் மற்றும் கல்விசாரா ஊழியர் சமூகத்தினர் என அனைவரும் ஓரணியில் நின்று ஒருமித்துக் குரல் உயர்த்தி தமது விடுதலையை வலுப்படுத்த வேண்டும் என அவர்கள் அக் கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறையிலிருந்து அரசியல் கைதிகள் எழுதிய கடிதம் வருமாறு,

அடிமைச் சாசனத்திற்கு அத்திபாரமாக கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆகியவற்றின் பெயரில் கைதுசெய்யப்பட்டு இலங்கையின் பல்வேறு சிறைக்கூடங்களிலும் நெடுங்காலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரயல் கைதிகளாகிய நாம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகமான தங்களுக்கு அன்புரிமையுடன் வேண்டுகோள் ஒன்றினை முன்வைக்கும் முக்கிய தருணம் ஏற்பட்டுள்ளது எனக் கருதுகின்றோம்.
அன்றுகளில் சமூக விடுதலைக்காக சிலுவை சுமந்த நாம், இன்றுகளில் சரீர விடுதலைக்காக போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. எம்மவர் சாதனைகளை சாலையேற்றி கதிரையேறிய கதா பாத்திரங்கள் கண்மூடிச் செயற்படுகின்ற இவ்வேளை கல்விப்புலத்தைக் கொண்டு பல்கலைக்கழக சமூகம் கண்கூர வேண்டும் என்று கம்பிக்கூண்டுக்குள் இருந்து கருணைத் தூது அனுப்புகின்றோம்.

அன்றுமுதல் இன்றுவரை தமிழரின் வாழ்வுரிமைப் போராட்டங்களில் வரையறுத்துக் கூறமுடியாத பெரும் வகிபாகத்தை நல்கிவரும் சமூக மனப்பாங்குள்ள பல்கலைச் சமூகத்தினதும் சிவில் சமூகங்களினதும் காலமறிந்த செயற்பாடுகளே முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான முழுத் தமிழரினதும் முதுகெலும்பாக இருந்து வருகிறது.

இதனைக் கண்டே இலங்கை ஆட்சியாளரும் எம் தமிழினத்தின் வாக்கு வேட்டையாடிகளும் ஏன் சர்வதேசத்தினரும்கூட சிலவற்றையேனும் தமிழருக்கு செய்யத் தலைப்படுகின்றனர்.

அரசியலுக்கு அப்பாலான அகிம்சைக் குரல்களை அவ்வளவு இலகுவில் யாராலும் அடக்கிவிடவோ அலட்சியப்படுத்தவோ முடியாது என்ற உண்மையின் அடிப்படையில் உங்கள் தூண்டுதல்களால் எங்கள் விடுதலை வாழ்வு துலங்கவேண்டும் என தடுப்புச் சிறைக்குள் இருந்து தாகம் கொள்கின்றோம். அதற்கு எம் தமிழ் உறவுகளின் கரங்கள் உங்களை வலுப்படுத்தும் என நம்புகின்றோம்.

8 முதல் 24 ஆண்டுகளாக இருள் வாழ்வில் மூழ்கிக் கிடக்கும் தமிழ் அரசியல் கைதிகளான எம்முள், “ 03 மரண தண்டனைக் கைதிகளும் 08 ஆயுள் தண்டனைக் கைதிகளும் 10 தொடக்கம் 200 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களும் அதற்கு மேலதிகமாக வழக்கு விசாரணைகளை எதிர்நோக்கிக்கொண்டிருக்கும் விளக்கமறியல் கைதிகளுடன் சேர்த்து சுமார் 130 பேர் இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளோம்.

எமது நெடுங்காலச் சிறையிருப்பு எமது குடும்பத்தினதும் பிள்ளைகளினதும் அன்றாடத்தை அழிவு நிலைக்குத் தள்ளி ஆண்டுகள் பல கடந்துவிட்டன. சமூக, பொருளாதார, கலாசாரப் பிரச்சினைகள் அவர்களைச் சீரழித்துக்கொண்டிருக்கின்றன. உறவுகளின் எல்லையற்ற பிரிவு மனங்களை உருக்குலையச் செய்கிறது. இத்தனையும் சமூக விடுதலைக்கு சாமரம் வீசியதால் ஸ்ரீலங்கா அரசு எமக்களித்த சிறப்புச் சலுகை என்பதை சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். சிரமேற்றுச் செயற்படுங்கள்!

தமிழரின் அரசியல் விடுதலைக்கான “போராட்டத்துடன் தொடர்புபட்டவர்கள்” என்ற காரணத்தைக் காட்டி சிறைவைக்கப்பட்டிருக்கும் நாம், ‘போர்க் கைதிகள்’ அல்லது ‘அரசியல் கைதிகள்’ என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்கமுடியாது. ஆகையினால், யுத்தம் ஓய்ந்து 08 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அரசாங்கம் நல்லிணக்க அடிப்படையில் அரசியல் தீர்மானம் ஒன்றை எடுத்து அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளையும் ஏதேனும் ஓர் பொறிமுறையின் ஊடாக விடுதலை செய்ய வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.

எமது இந்த நீதி நியாயமான கோரிக்கையை பலப்படுத்தி, பிறர்நலம் போற்றும் அருளறம் வாய்ந்த பல்கலைக்கழகத் துணைவேந்தர், பீடாதிபதிகள், துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள், அனைத்துப்பீட மாணவர் ஒன்றியத்தினர் மற்றும் கல்விசாரா ஊழியர் சமூகத்தினர் என அனைவரும் ஓரணியில் நின்று ஒருமித்துக் குரல் உயர்த்தி எமது விடுதலையை வலுப்படுத்த வேண்டும் என விநயமுடன் வேண்டுகோள் விடுக்கின்றோம் – என்றுள்ளது.

Related Posts