நிதி நிறுவனங்களிடம் இருந்து பெற்ற கடன்களை மீளச் செலுத்த முடியாமல் இளம் குடும்பப் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை 16.10.2017 இடம்பெற்ற இச்சம்பவத்தில் வினாசியர் வீதி, சந்திவெளியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான 26 வயதுடைய செல்வம் யோகேஸ்வரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, கிராமங்களில் நுண்கடன்நிதி வழங்கும் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து இவர் கடன் பெற்றுள்ளார்.
ஆகக் கூடுதலாக ஒரு நிறுவனத்திடமிருந்து பெற்ற 1 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவும் இந்தக் கடன் தொகையில் உள்ளடங்கும்.
இதேவேளை, கட்டார் நாட்டில் வேலைவாய்ப்புப் பெற்றிருந்த அவரது கணவன் மாதாந்தம் குடும்பச் செலவுக்காக ஒரு தொகைப் பணமும் அனுப்பியிருந்தார்.
இதனிடையே கட்டார் நாட்டுக்கு தொழில் வாய்ப்புப் பெற்றுச் சென்ற கணவன் அங்கு அவர் தொழில் புரிந்த நிறுவனம் மூடப்பட்டதன் காரணமாக நாடு திரும்பியுள்ள நிலையில் நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன் தவணைப் பணத்தைச் திருப்பிச் செலுத்த முடியாமல் மனைவி திண்டாடியுள்ளார்.
இந்நிலையிலேயே குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், உடற்கூற்றுப் பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.