இலங்கையில் யுத்த நிறுத்தம் அமுலில் இருந்த சந்தர்ப்பத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் ஒரு வார காலம் தங்கியிருந்ததாகவும், அச் சந்தர்ப்பத்தில் இலங்கை போர் தொடர்பில் ஒரு படத்தை இயக்குமாறு பிரபாகரன் தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் இயக்குநர் சிகரம் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
இந்திய தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரபாகரனை 18 அடி தூரத்தில் இருந்தே யாராக இருந்தாலும் சந்திக்க வேண்டுமென்ற நியதி காணப்பட்ட போதும், தன்னை அருகில் வருவதற்கு பிரபாகரன் அனுமதித்ததாக பாரதிராஜா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
அதுமட்டுமன்றி, பிரபாகரன், பொட்டு அம்மன் மற்றும் சூசை உள்ளிட்ட 5 தலைவர்களுடன் யாருமே ஒன்றாக அமர்ந்து கலந்துரையாடியதில்லையென குறிப்பிட்டுள்ள பாரதிராஜா, அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உரையாடிய சந்தர்ப்பம் வேறு யாருக்கும் கிடைத்ததில்லையென குறிப்பிட்டுள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தில் தனது ஆசையை பிரபாகரன் தெரிவித்ததாகவும், அதனை எதிர்காலத்தில் நிறைவேற்றும் எண்ணம் இருப்பதாகவும் பாரதிராஜா மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பேச்சில் மாத்திரம் பலர் சாதித்து வரும் நிலையில், எந்த வித பின்னணியும் இன்றி நான்கு பேரை நானூறாக்கி அவர்களை நான்காயிரமாக்கி மிக பிரமாண்டமான ஒரு போராளியாக நின்றது பிரபாகரன் மட்டுமே என பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.
அகநானூறு, புறநானுறு போன்ற இலக்கியங்களில் மாத்திரமே பிரபாகரனை போன்ற வீரனை பார்க்க முடியும் என்று குறிப்பிட்ட பாரதிராஜா, இந்த நூற்றாண்டில் இலக்கியங்களில் வந்த புரட்சி வீரர்களை போன்று செயற்பட்ட ஒரே ஒரு தலைவன் பிரபாகரன் மட்டுமே எனவும் தெரிவித்துள்ளார்.
அவர் முன்னெடுத்த போராட்டத்திற்கு சகல தமிழ் மக்களும் ஆதரவு வழங்கி, சகலரும் குரல்கொடுத்து வெற்றிபெற்றிருந்தால், ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியாக அது அமைந்திருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.