2 வது சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கையை எதிர்த்து ஆடிய பாகிஸ்தான் அணி 32 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தான் தமது துடுப்பாட்டத்தின் போது 9 விக்கெட் இழப்புக்கு 219 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி 48 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 187 ஓட்டங்களை மாத்திரம் ஈட்டியது.
உப்புல் தரங்க 112 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக் கொடுத்தார்.
இதேவேளை இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான இறுதி 20க்கு இருபது போட்டி லாகூரில் இடம்பெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 29ம் திகதி லாகூர் மைதானத்தில் குறித்த போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட் அணி கடந்த 2009ம் ஆண்டு பாகிஸ்தானில் விளையாடியபோது, அவர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதன்பின்னர் முக்கிய நாடுகள் பல தமது அணிகளை பாகிஸ்தானுக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டி வந்தன.
தற்போது ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் இரு அணிகளும் டெஸ்ட் தொடரை நிறைவு செய்துள்ளதோடு, ஒருநாள் தொடரில் மோதி வருகின்றன.
இதனையடுத்து, மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இதில் கடைசிப் போட்டி மட்டும் பாகிஸ்தானின் லாகூரில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
எனினும், குறித்த முடிவு தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, இந்தத் தீர்மானத்தில் இழுபறி நிலை ஏற்பட்டது.
எனினும், தற்போது குறித்த போட்டி லாகூரில் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.