தற்போது அவசரகாலச் சட்டமோ பயங்கரவாத தடைச் சட்டமோ, நடைமுறையில் இல்லை என்பது தெரியுமா?- சரா எம்பி இராணுவத்துடன் தர்க்கம்!

வடபகுதியில் காணி சுவீகரிப்புத் தொடர்பாக, எந்த ஒரு விடயமும் வர்த்தமானியில் பகிரங்கப்படுத்தப்பட்டதன் பின்னர், அந்த விடயத்தில் பிரதேச சபைகள் மட்டுமன்றி வேறு எந்தத் தரப்பினரும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இவ்வாறு 51 ஆவது படையணியின் பிரிகேடியர் சன்ன குணவர்தன  தெரிவித்துள்ளார்.

நல்லூர் பிரதேச சபைக்குச் சொந்தமான காணி ஒன்றைப் படையினர் அடாத்தாகக் கையகப்படுத்தியுள்ளனர்.

இந்த அத்துமீறல் தொடர்பாகவும் மக்கள் பிரச்சினையான இந்த விடயம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் நேற்று முற்பகல் கோப்பாயில் உள்ள 51 ஆவது படையணியின் தலைமையகத்தில் பிரிகேடியரைச் சந்தித்து உரையாடினார்.

அவ்வேளையிலேயே மேற்கண்ட புதிய தகவல் வெளியிடப்பட்டது. இது குறித்து பிரிகேடியர் தெரிவித்ததாவது:

நான் கடமையேற்று ஒன்றரை மாதங்கள் மட்டுமே ஆகின்றன. இந்த நிலையில் இவ் விடயம் குறித்து முழுமையாக எனக்குத் தெரியாது. முன்னர் இருந்தவர்கள் இந்த விடயங்களைக் கையாண்டிருப்பார்கள். எனினும் இந்த விடயம் குறித்து உரிய விசாரணை செய்யப்படும்.

இந்த விடயம் குறித்து வர்த்தமானி அறிவித்தலுக்கு அனுப்பியிருக்காதவிடத்து மட்டும், பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும். வர்த்தமானி அறிவிப்புக்குக் குறித்த விடயம் உரியவர்களால் அனுப்பப்பட்டிருப்பின், இந்த விடயத்தில் பிரதேச சபையால் மட்டுமன்றி வேறு எந்தத் தரப்பினராலும் எதுவித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றார்.

இதற்கு பிரிகேடியருக்கு பதிலளித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தெரிவித்ததாவது:

“குறித்த காணியின் ஒரு பகுதியை கம்பன் விளையாட்டுக்கழகம், கம்பன் சன சமூக நிலையம், மகாத்மாஜி விளையாட்டுக் கழகம், மகாத்மாஜி சன சமூக நிலையம், சிறுவர் முன்பள்ளி, ஜே/114 கிராம சேவகர் பிரிவின் மாதர் அபிவிருத்திச் சங்கம் என்பன பயன்படுத்தி வருகின்றன.

இவ்வாறு பெரும்பாலும் இளையோரால் பயன்படுத்தப்பட்டுவரும் இந்தக் காணியை படையினர் அத்துமீறிப் பறித்து தமதாக்கியுள்ளமை இளையோரின் மனநிலையில் வேண்டத்தகாத மாற்றத்தை ஏற்படுத்தும்.

தேசிய பாதுகாப்பு என்று கூறிக்கொண்டு படையினர் மேற்கொள்ளும் இவ்வாறான செயற்பாடுகள் எந்தவகையிலும் நியாயமற்றவை. யாழ்ப்பாண மக்கள் திருநெல்வேலி காணி விவகாரத்தால் குழம்பிப்போய் உள்ளனர்.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் மக்களைக் குழப்பி விட்டால் எப்படி தேசிய பாதுகாப்பைப் பேண முடியும்? சுமுகமான தீர்வு இல்லையேல் மக்கள் சத்தியாக்கிரகம் இருக்கவும் தயங்க மாட்டோம் என்று தெரிவிக்கின்றனர்” என்று விளக்கினார்.

முன்னதாக குறித்த இடத்தைப் பார்வையிட நாடாளுமன்ற உறுப்பினர், நல்லூர் பிரதேச சபைத் தலைவர் ப.வசந்தகுமார் மற்றும் உறுப்பினர்கள் எஸ்.துரைமணி, எஸ்.கஜேந்திரன் சகிதம் சென்றார்.

அங்கு பூட்டப்பட்ட நிலையில் இராணுவப் பாதுகாப்புடன் இருக்கும் நல்லூர் பிரதேச சபைக்குச் சொந்தமான காணியை படம் எடுக்க நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் முற்பட்ட போது, அங்கு நின்ற படைச் சிப்பாய் ஒருவர் அதனைத் தடுத்துள்ளார்.

இதனை உடனடியாக மறுத்து செயலில் ஈடுபட்ட சரவணபவன் “தற்போது அவசரகாலச் சட்டமோ பயங்கரவாத தடைச் சட்டமோ, நடைமுறையில் இல்லை என்பது உமக்குத் தெரியுமா? படம் எடுப்பதை நீர் தடுக்க முடியாது” என்று ஒரு போடு போட்டார்.

இந்த நிலையில் திருநெல்வேலி முகாம் பொறுப்பாளர் கப்டன் மஹேஸுடன் பிரதேச சபைத் தலைவர் தொடர்பு கொண்டபோது, அவர் முக்கிய சந்திப்புத் தொடர்பாக வெளியே சென்றிருப்பதாகப் பதிலளிக்கப்பட்டது.

அதனையடுத்து கோப்பாய் பொலிஸ் நிலையம் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த விடயத்தைத் தெளிவுபடுத்தினார். இது குறித்து பிரிகேடியருடன் பேசுமாறு கோப்பாய் பொலிஸார் தெரிவித்ததை அடுத்தே பிரிகேடியரை சரவணபவன் சந்தித்தார்.

திருநெல்வேலி பாற்பண்ணைக்கு முன்பாக உள்ள நல்லூர் பிரதேச சபைக்குச் சொந்தமான காணி ஒன்றை அனுமதி எதுவும் இன்றிப் படையினர் கையகப்படுத்தியுள்ளனர்.

இந்தக் காணியைப் படையினருக்கு வழங்குவதில்லை என்று நல்லூர் பிரதேச சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. இந்த நிலையில் அங்கிருந்த காவலாளியையும் துரத்திவிட்டு குறித்த காணியின் வாயில் “கேற்’றுக்கு பூட்டுப் போடப்பட்டுள்ள நிலையில் அங்கு இராணுவப் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருக்கிறது.

இது பிரதேச சபையின் காணி என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள போதும், இவ்வாறு படையினர் நடந்து கொண்டுள்ளமை, மக்களிடையே கடும் அதிருப்தியையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக, கடந்த வெள்ளிக்கிழமை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறையிடுவதற்கு நல்லூர் பிரதேச சபைத் தலைவர் சென்றிருந்த நிலையில் முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

எனினும் நேற்று முன்தினம் சனிக்கிழமை குறித்த முறைப்பாடு ஏற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts