நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கவே என்னை ஜனாதிபதி ஆக்கினார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார்.
யாழ். இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யாழ்ப்பாணத்திற்கு வரும் போது, சில பிரச்சினைகள் இடம்பெற்றன. போராட்டங்கள் இடம்பெற்றன. பல வருடகாலமாக அரசியல் செய்பவன் என்ற வகையில் நாட்டில் உள்ள போராட்டங்கள் பற்றி எனக்குத் தெரியும். இந்த நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கவே என்னை ஜனாதிபதி ஆக்கினார்கள்.
தேசிய நல்லிணக்கத்தினையும் ஒற்றுமையையும் ஏற்படுத்த வேண்டும். பொருளாதாரத்தினை மேம்படுத்த வேண்டும். ஏழ்மை இல்லாமல் செய்ய வேண்டும். ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் மேற்கொள்பவர்கள் என்னுடன் வந்து கலந்துரையாடவேண்டும். கறுப்பு கொடியினை காட்டிகொண்டு உரத்துச் சத்தம் இட்டது எனக்காக என்று எண்ணினேன்.
ஏன் கறுப்பு கொடி காட்டி சத்தம் போடுகின்றீர்கள் என கேட்டேன். அவர்களின் பிரச்சினையைச் சொன்னார்கள். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், பேசித் தீர்க்க வேண்டும். எந்த மாகாணமாக இருந்தாலும், முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள கூடாது.
வன்முறைளை ஏற்படுத்தக் கூடாது. இந்த நாட்டில் இனி எந்த விதத்திலும் யுத்தம் ஏற்படுத்த இடமளிக்க முடியாது” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
யாழ்.இந்துக்கல்லுாரிக்கு முன்பாக அரசியல் கைதிகள் தொடர்பில் வீதியில் போராட்டம் நடத்திய போராட்டக்காரர்களை ஜனாதிபதி நேரடியாக சந்தித்தார்.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்வதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என வட.மாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
கறுப்புக்கொடி போராட்டம்
யாழ்.காங்கேசன்துறை வீதியில் யாழ்.இந்துக்கல்லூரிக்கு முன்பாக அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வட.மாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தலைமையிலான அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது, ஜனாதிபதியின் வருகையை எதிர்த்தும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் பல கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை பாடசாலை வளாகத்திற்குள்ளே அனுமதிக்காது வழி மறித்தனர். இருந்தும் போராட்டக்காரார்கள், வீதி ஒரு பக்கத்தில் நின்று அரசியல் கைதிகளின் வழக்குகளை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டாமென்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இதன்போது, அரசியல் கைதிகளின் விடுதலை செய்யுமாறும், வவுனியா நீதிமன்றில் வழக்குகளை நடாத்துமாறு உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் வழக்குகளை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டாமென்றும் கோரிக்கை முன்வைத்தனர்.
திடீரென சனாதிபதி வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சந்தித்தார். கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி தான் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்ததாக வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார். இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பொது அமைப்புக்களுடன் ஜனாதிபதி சந்தித்து விரைவில் கலந்துரையாடுவதாக உறுதியளித்தார். ஆயினும் ஆர்பாட்டக்காரர் உடனடித்தீர்வை வலியுறுதினர்.
இதேவேளை அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய இன்றைய தினம் மாலை தமிழ் மக்கள் பேரவை அவசர கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.