யாழ்ப்பாணம் காக்கைதீவு குப்பை மேட்டிற்கு தீ மூட்பட்டுள்ளதால் அப் பகுதியெங்கும் பெரும் பாரிய புகைமண்டலம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அக் குப்பை மேடு காணப்படும் வீதியின் ஊடான போக்குவரத்துக்களும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளானது யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை வீதியில் உள்ள குறித்த குப்பை மேட்டில் கொட்டப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலைமையில் தற்போது சில நாட்களாக அக் குப்பை மேட்டில் சேகரிக்கப்படும் குப்பைகள் விடுமுறை நாட்களில் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் தீ மூட்டப்பட்டு வருகின்றது. இச் செயற்பாட்டின் அடுத்த கட்டமாக நேற்றய தினம் குறித்த குப்பை மேட்டின் அனைத்து குப்பைகளுக்கும் தீ மூட்டப்பட்டுள்ளது.
இதனால் தீ சுவாலைகள் பல கிலோ மீற்றர் துரத்திற்குமப்பால் தெரியும் வகையில் கொளுந்து விட்டு எரிவதுடன் அங்கே கொட்டப்பட்ட பிளாஸ்ரிக் கழிவுகள் தீயில் எரிந்து அவற்றில் இருந்து வெளிக்கிழம்பிய புகையானது அப் பகுதி முழுவதையும் மூடிக் காணப்படுகின்றது.
குறித்த புகை மண்டலத்தின் காரணமாக அப் பகுதி ஊடான போக்குவரத்தானது முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. குறிப்பாக வீதி வெளிச்சம் அற்ற அவ் வீதியில் தற்போது இப் புகையும் சூழ்ந்துள்ளதால் வாகனங்கள் அப் பகுதியை கடந்து செல்ல முடியாத நிலையில் காணப்படுகின்றன.
அதாவது முன்னே செல்லும் அல்லது முன்னிருந்து வரும் வாகனம் என்னவென்று தெரியாத அளவிற்கு அவ் வீதி உட்பட அப் பகுதியானது புகையினால் மூடப்பட்டுள்ளது. இதுவரை தீயினை அணைப்பதற்கான எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதேவேளை இங்கு சேகரிக்கப்படும் குப்பைகளிருந்து அயலில் உள்ள பிரதேசமான நவாலி, ஆணைக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு தோற்று நோய்களை ஏற்படுத்த கூடிய ஈக்கள் பரவுவதாகவும், அக் குப்பைகளிவுகளால் நோய்கள் பரவுவதாகவும், சுற்றுசூழல் மாசுபடுவதாகவும் அப் பிரதேச மக்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
மேலும் குறித்த பகுதியில் குப்பைகள் கொட்டப்பட கூடாது எனவும் கோரி மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்துடன் நீதிமன்றில் வழக்கும் தொடரப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் அங்கு கொட்டப்படும் குப்பைக கழிவுகள் முறையாக பராமரிப்பு செய்யப்பட வேண்டும் எனவும் சுற்றுச் சுழலுக்கு தீங்கு ஏற்படா வண்ணம் பார்க்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டதக்கது.