வடக்கு மாகாண அமைச்சர்களால் தனக்கு பாரிய அவமானம் ஏற்பட்டுள்ளதாக அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
மாகாண சபையின் 107 ஆவது அமர்வு நேற்று பேரவை கட்டடத்தில் நடைபெற்றது.
இதன்போது அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல்கைதிகளுக்கு நீதி வழங்கப்படவேண்டும் என வலியுறுத்திய பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த பிரேரணையை சமர்ப்பித்து அவைத்தலைவர் உரையாற்றிய பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா உள்ளிட்ட உறுப்பினர்கள் தத்தமது கருத்துக்களை வெளியிட்டனர்.
இந்த சந்தர்ப்பத்தில் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் உரையாற்ற முற்பட்ட போது அதற்கு அனுமதியளிக்காத அவைத்தலைவர் இன்றைய அமர்வில் முதலமைச்சரும் பங்குகொள்ளாத நிலையில் அமைச்சர்கள் நேரத்திற்கு சபைக்கு சமூகமளிக்க வேண்டும் என கூறினார்.
எனினும் அவைத் தலைவரின் இந்த கருத்தை மறுத்த அனந்தி சசிதரன் தாம் நேரத்திற்கு சபை கட்டடத்திற்குள் வந்து விட்டதாகவும், ஆனால் வெளியில் தொண்டர் ஆசிரியர்கள் நின்றதால் அவர்களை சந்தித்து பேசியதால் தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
அதனையும் ஏற்க மறுத்த அவைத்தலைவர், தொண்டர் ஆசிரியர்களை சந்தித்தது அமைச்சரின் தனிப்பட்ட விடயம் எனவும், சபைக்கு நேரத்திற்கு வரவேண்டியது அமைச்சர்களின் கடமை எனவும் எச்சரித்தார்.
தொடர்ந்தும் பேசிய அவைத்தலைவர், சபையில் ஆசனங்கள் வெறுமையாக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் தன்னிடம் முறையிடுவதாக தெரிவித்தார்.
எனவே சபைக்கு வருகைதராத அமைச்சர்களால் தாம் அவமானத்திற்கு உள்ளாக்கப்படுவதாகவும் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கடும் தொனியில் கூறினார்.