அரசியல் கைதிகளை சந்திக்க செல்லும் வடமாகாண சபை குழு

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய வடமாகாண சபையின் நால்வரை கொண்ட குழு இன்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்யவுள்ளது.

இந்த குழுவில் தாம், உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் மேலும் இருவர் அடங்குவதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

தமது குழு இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று உண்ணாவிரதத்தை தொடரும் மூன்று அரசியல் கைதிகளையும் சந்தித்து நலம் விசாரிப்பதோடு, அவர்களின் கோரிக்கை தொடர்பில் தற்போது காணப்படும் நிலைப்பாட்டையும் எடுத்து கூற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் நேற்று அரசியல் கைதிகள் தொடர்பில் மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மின்னஞ்சல் மூலம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அதன் முன்னேற்றம் தொடர்பில் இன்று கேட்டறிய உள்ளதாகவும் சி.வி.கே கூறினார்.

இராசதுரை திருவரன், மதியழகன் சுலக்சன் மற்றும் கணேசன் தர்சனன் ஆகிய மூவரும் கடந்த எட்டு வருடங்களுக்கும் மேலாக அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அவர்கள் தொடர்பான வழக்கு வவுனியா மேல்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தநிலையில் தற்போது அனுராதபுரம் மேல்நீதிமன்றத்திற்கு சட்டமா அதிபர் திணைக்களம் மாற்றியுள்ளது.

இதற்கு எதிர்பை தெரிவித்து குறித்த மூன்று அரசியல்கைதிகளும் கடந்த 25 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக இன்று வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts