இலங்கை தமிழ் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில், தமிழ் தலைமைகள் இனியும் மௌனம் காக்காது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி, யாழ்.பல்கலைக்கழகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரியும், வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் வழக்கை அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் இன்று (புதன்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் மற்றும் சில பொது அமைப்பினரும் கலந்துகொண்டனர்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்ந்தும் இழுபறியில் இருக்கும் நிலையில், கடந்த நான்கு வருட காலமாக வவுனியாவில் நடைபெற்று வந்த தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் வழக்கு திடீரென அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சிங்களப் பிரதேசத்திற்கு மாற்றுவதால் ஏற்பட்டுள்ள மொழிப்பிரச்சினை மற்றும் கால நீடிப்பு என்பவற்றை சம்பந்தப்பட்டோர் சுட்டிக்காட்டியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட மூன்று தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் உடல் நிலை பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் காலத்தை வீணடிக்காது அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென குறிப்பிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதமொன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.