வடக்கு மாகாணசபை பலம் பெற்று விடக் கூடாது என்பதற்காகத் தெற்கு முன்னெடுத்த சதிக்கு எம்மவர்கள் சிலரும் தெரிந்தோ தெரியாமாலோ துணை போனதன் மூலம் வடக்கு மாகாணசபையின் அரசியல் அறம் தாழ்ந்து போயுள்ளதாக முன்னாள் விவசாய அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
தாவடி வேதவிநாயகர் விளையாட்டுக்கழகத்தின் வாணிவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (01.10.2017) நடைபெற்றது. இவ்விழாவில் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் உரையாற்றும்போது,
கல்வி, செல்வம், வீரம் ஆகிய முப்பெரும் வளங்களைத் தருமாறு மூன்று பெருந்தேவிகளை வேண்டி நவராத்திரி விழாவைக் கொண்டாடி வருகிறோம். இம்மூன்றும் வாழ்க்கைக்கு அவசியமானவை. இவற்றில் ஒன்று இல்லாமற்போனாலும் மற்றையவற்றைத் தக்கவைக்க முடியாது. ஆனால், இம்மூன்று வளங்களும் கிடைத்தும் இவற்றில் அறம் இல்லாது போனால் வாழ்க்கையே முழுமை பெறாது.
அறம் என்றால் மாசு இல்லாத மனசு என்கிறது திருக்குறள். கல்வி அறிவு எவ்வளவுதான் இருந்தாலும் அந்த அறிவு ஆக்கத்துக்கு அல்லாமல் அழிவுக்குப் பயன்படுத்தப்பட்டால், செல்வம் எவ்வளவுதான் குவிந்தாலும் அது உழைப்பால் அல்லாமல் குறுக்கு வழியில் தேடிய சொத்தாக இருந்தால், எவ்வளவுதான் பலம் பொருந்தியவராக இருந்தாலும் அந்த வீரம் நேருக்கு நேராக அல்லாமல் முதுகில் குத்தும் துரோகமாக இருந்தால் அறம் பிழைத்துவிடும். கடைசியில், என்றோ ஒருநாள் அதற்கான விளைவை அனுபவித்தே தீரவேண்டி வரும்.
பௌத்த சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராக நாங்கள் முன்னெடுத்த ஆயுதப் போரட்டம் ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தின் விடுதலைக்கானது என்பதில் அதற்கான அறம் உள்ளது. ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டாலும் இந்த அறம் எமக்கான தீர்வைத் தேடித்தரும். ஆனால், அதனை நோக்கிப் பயணிக்க வேண்டிய அரசியல்வாதிகள் பலரின் அரசியல் அறம்தான் கேள்விக்குறியாக உள்ளது.
விடுதலை அரசியலில் விடுதலை என்ற இலக்கு மாத்திரமே போராளிகளுக்கு இருந்தது. அங்கு தனிமனித ஆசைகளுக்கு இடம் இருக்கவில்லை. ஆனால், தேர்தல் அரசியலில் கதிரைகள் மட்டுமே இலக்கு என்ற துர்ப்பாக்கிய நிலைமையே இன்று உள்ளது. எந்தச் சதியில் ஈடுபட்டேனும் கதிரைகளைப் பிடிக்க முயலுவதும் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களே எவ்வித கூச்சமும் இல்லாமல் அமைச்சர்களாவதும் இன்று அரங்கேறி வருகிறது. வடக்கு மாகாணசபை பலம் பெற்று விடக்கூடாது என்பதற்காகத் தெற்கு முன்னெடுத்த சதிக்கு எம்மவர்கள் சிலரும் தெரிந்தோ தெரியாமாலோ துணை போனதன் மூலம் வடக்கு மாகாணசபையின் அரசியல் அறம் தாழ்ந்து போயுள்ளது. வாக்களித்த மக்களின் நலன்களைப் புறம்தள்ளிச் சுயநலனுக்காக அரசியல் அறத்தைக் குழிதோண்டிப் புதைப்பவர்களுக்கு அந்த அறமே ஒருநாள் கூற்றுவனாக அமையும்.
எனவே நாம் கல்வி, செல்வம், வீரம், அரசியல் என்று எதைத் தேடினாலும் அதில் அறம் தப்பாமையைக் கடைப்பிடித்தே ஆகவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.