யாழ்ப்பாணத்தில் பௌத்த மதத்தைப் பரப்பும் நோக்கம் இராணுவத்திற்கு இல்லை. ஆனால் யாழ்ப்பாணத்திலுள்ள சில ஊடகங்கள் இராணுவத்தினர் பௌத்த மதத்தைப் பரப்புவதாகக் கூறி செய்திகளை திரிவுபடுத்திவருவதாக யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் நாக விகாரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்து, பௌத்த அறிநெறிப் பாடசாலை அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
‘தமிழ் மக்களும் சிங்கள மக்களும் சமய கலாசார ரீதியில் இணைந்துள்ளோம். இந்து மதத்திற்கும் பௌத்த மதத்திற்குமிடையிலான ஒற்றுமையை வலுப்படுத்தும் நிகழ்வாகவே இது அமைந்துள்ளது.
இந்துக்களை பௌத்தத்திற்கு மாற்றும் செயற்பாடோ அல்லது பௌத்தத்தை பரப்பும் செயற்பாடோ அல்ல. பௌத்த மதத்திலிருக்கின்ற சிந்தனைகள், அறநெறிகளை தமிழ் மாணவர்களும் அறிந்துகொண்டு எதிர்காலத்தில் சிறந்த பண்புள்ளவர்களாக அவர்களை உருவாக்குவதே இவ் அறநெறிப் பாடசாலையின் நோக்கமாகும்.
தற்போது ஏற்பட்டுள்ள சமாதானத்தின் மூலம் இலங்கைத்தீவில் நாம் அனைவரும் அறநெறிச் சிந்தனைகளை கடைப்பிடித்து ஒன்றுபட்டு வாழவேண்டுமென்பதே எமது நோக்கமாகும்’ என்றார்.