வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் வடக்கு மாகாணத்தை நோக்கி நகர்வதால் இரு தினங்களுக்கு பலத்த காற்று வீசுவதுடன் மழையும் பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருகின்றன என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறை மூத்த விரிவுரையாளர் நா.பிரதீபராஜா தெரிவித்தார்.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாடு முழுவதும் சடுதியான காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. தாழமுக்கமானது தற்போது இலங்கையின் தெற்குப் பகுதியில் இருந்து வடக்கை நோக்கி நகர்கிறது.
காற்றின் வேகம் இரண்டு நாட்களுக்கு நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றமையால் புத்தளம் தொடக்கம் பொத்துவில் வரையான கடற்பகுதியிலும் வடக்கு கடற்பரப்பிலும் கடற்றொழிலுக்குச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது.
தாழமுக்கம் வடக்கை நோக்கி வருவதால் இன்றுமுதல் இரு தினங்களுக்கு காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.