இலங்கை குடியுரிமை பறிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சகல குற்றச்சாட்டுக்களிலும் இருந்து விடுவித்த அரசாங்கம், வருடக்கணக்கில் எவ்வித வழக்கும் தாக்கல் செய்யப்படாமல் சிறையில் வாடும் தமிழ் இளைஞர்கள் விடயத்தில் பாராமுகமாக செயற்படுவதாக தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் பொன்னுத்துரை சிவசுப்மணியம் தெரிவித்துள்ளார்.
லண்டனில் இருந்து வருகை தந்துள்ள அவர், கிளிநொச்சியில் நேற்று (திங்கட்கிழமை) நடத்திய ஊடக சந்திப்பிலேயே இக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.
உலகின் எந்த நாடுகளிலும் இல்லாத பயங்கரவாத தடைச் சட்டத்தை இன்னமும் இலங்கை அரசாங்கம் நடைமுறையில் வைத்துள்ளமை குறித்து விசனம் தெரிவித்த அவர், ஜனாதிபதி நினைத்தால் சிறையிலுள்ள தமிழ் இளைஞர்களை விடுவிக்க முடியுமென குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, காணாமல் போனோரில் 7 பேர் மாத்திரமே உள்ளனர் என்றும், ஏனையோர் தொடர்பான தகவல் இல்லையென்றும் அரசாங்கம் தெரிவித்து வருகின்ற நிலையில், அப்படியாயின் ஏனையோருக்கு என்ன நடந்ததென நிரூபிக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளதென சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், தமது வாக்குப் பலத்தால் ஆட்சிக்கு வந்தவர்கள் தமக்கான தீர்வை பெற்றுத்தரவில்லை என்ற ஆதங்கமே, இன்று மக்களை போராட்டத்தை கையிலெடுக்க வைத்துள்ளதென பொன்னுத்துரை சிவசுப்மணியம் மேலும் குறிப்பிட்டார்.