எதிர்வரும் 20ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வாரம் அனுஷ்டிக்கப்படுமென டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் தேசிய இணைப்பாளரும் விசேட வைத்தியருமான ஹசித்த திசேரா தெரிவித்துள்ளாா்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது இவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“2017ஆண்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் அதனால் ஏற்படக்கூடிய உயிரிழப்பை குறைப்பதற்கு முடிந்துள்ளது.
2017ஆம் ஆண்டில் டெங்குநோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1இலட்சத்து 51ஆயிரத்து 975 ஆகும். இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 390 ஆகும். இறந்தவர்களில் 68 சதவீதமானோர் பெண்களாவர்.
மேல்மாகாணத்தில் 50 சதவீதமான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். நகர பிரதேசங்களில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது.
நகர பிரதேசங்களில் சுற்றாடலை துப்பரவு செய்தலில் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும். பாடசாலை மாணவர்களில், நகரப்பகுதிகளில் 30 சதவீதமானவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர். உயிரிழப்பு 15 சதவீதமாகவே காணப்பட்டது.
இம்முறை 188 பிரதேச சுகாதார அதிகார பிரிவுகளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது” என ஹசித்த திசேரா தெரிவித்துள்ளார்.