யாழ் நகரில் மலத்தொற்று கிருமி கலந்துள்ளதால் கிணறுகள் மூடப்படும் அபாயம்!!!

யாழ்.நகர்ப் பகுதியில் உள்ள சில கரையூர் பிரதேசங்களில் உள்ள கிணறுகளில் மலத்தொற்று கிருமி கலந்துள்ளதால் 100 இற்கு மேற்பட்ட கிணறுகள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈகோலி என்னும் மலத்தொற்று கிருமி கிணறுகளில் கலந்துள்ளதாக யாழ் மாநகர சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக குருநகர் பாசையூர் கொட்டடி நாவாந்துறை போன்ற கரையூர் பிரதேச மக்கள் குடிதண்ணீர் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுப்பதை நிறுத்தி வருகின்றனர்.

மலசலகூட கழிவுக்குழிக்கும் கிணற்றுக்கும் இடையே 15 மீற்றர் தொடக்கம் 20 மீற்றர் வரை இடைவெளி தூரம் இருக்க வேண்டும். ஆனால், யாழ் நகர்ப் பகுதியில் மக்கள் செறிந்து வாழ்வதால் கிணற்றுக்கும் மலசலகூடத்துக்கும் இடைவெளி மிகக் குறைவாகவே உள்ளது.

நுண்துளைகளைக் கொண்ட சுண்ணாம்புக் கற்கள் ஒரு சிறந்த வடிகட்டி அல்ல என்பதால் கழிவு நீர் தடையின்றிக் கிணற்று நீருடன் சங்கமமாகிறது. குடி நீரில் நைத்திரேற்றின் அளவு அதிகரித்துச் செல்வதற்கு இந்த மலக்கழிவு நீரும் ஒரு காரணமாகும்.

அத்தோடு மலக் கிருமிகளான இ.கோலி, கோலிஃபோர்ம்கள் போன்றனவும் குடிநீரில் தாராளமாகக் குடியேறுகின்றன. பாசையூர், குருநகர், கொட்டடி, நாவாந்துறைப் பகுதிகளில் கிணற்று நீரைக் குடிப்பதற்கு மாத்திரமல்லாமல் வேறு எந்தத் தேவைகளுக்கும் பயன்படுத்த முடியாத அளவுக்கு இந்தக் கிருமிகள் ஆக்கிரமித்துள்ளன.

தரைக்கீழ் நீர் மாசடைவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. முறையற்ற விதத்தில் மலக்குழிகளை அமைப்பதாலும் கழிவுநீர் செல்லும் கால்வாய்கள் இல்லாமை திண்மக்கழிவுகள் சரியான முறையில் அகற்றப்படாமை போன்ற காரணங்களால் நிலத்தடி நீர் மாசடைகிறது.

தரைக்கீழ் நீரில் நைத்திரேற்று செறிவு அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தொற்றுக் கிருமி அதிகளவாக காணப்படுகிறது. அதிகமான செயற்கைப்பசளை பாவனை காரணமாக நைற்றிறேற்றின் அளவு அதிகரித்துள்ளது, மலசலகூடங்கள் முறையான வகையில் அமைக்காததால் ஊடு வடிதலினூடாக அங்கிகள் தரைக்கீழ் நீரில் கலக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனால் குடிதண்ணீரை விலைக்கு வாங்கும் தருவாய்க்கு யாழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். 50 ஆயிரம் கன மீற்றர் அளவு குடிதண்ணீர் இன்று யாழ் மக்களுக்கு தேவையாகவுள்ளது. மாரி காலத்தில் 34.960 கன மீற்றர் அளவு குடிதண்ணீரையும் கோடை காலத்தில் 13.100 கன மீற்றர் அளவு குடிதண்ணீரையும் மட்டுமே யாழ் மக்களால் பெற முடிகிறது.

இதனால் குடிதண்ணீரை வழங்க யாழ்.கிளிநொச்சி நீர் வடிகாலமைப்புச் சபையால் முடியவில்லை.நீர் வடிகாலமைப்புச் சபையால் ஏறத்தாழ 2000 கன மீற்றர் குடிதண்ணீரையே யாழ் மக்களுக்கு வழங்கக் கூடியதாக இருக்கிறது. வலிகாமம், வடமராட்சி.தீவகம் போன்ற பிரதேசங்களிற்குகுடிதண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.

போத்தலில் அடைக்கப்பட்ட குடிதண்ணீரை விலைக்கு வாங்கி பாவிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை யாழ்.குடாநாட்டில் அதிகரித்துள்ளன.20 லீற்றர் தண்ணீர் போத்தல் ஒன்று சராசரியாக 200ரூபாயிற்கு விற்கப்படும் நிலையில் மாதம் 6000 ரூபாய் குடிதண்ணீருக்கு செலவாகிறது என்று தெரிவிக்கின்றனர்.

மக்கள் ஆரோக்கியம் தேடி ஓடி வரும் மருத்துவமனைகளும் குடா நாட்டில் ஆரோக்கியமாக இல்லை. இதற்கு யாழ் போதனா மருத்துவமனையே சாட்சி. இங்கு காணப்படுகின்ற ஐந்து கிணறுகளில் நான்கில் மலக் கிருமிகளே வாசம் செய்வதாக யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் முன்னாள் பேராசிரியர் வைத்தியகலாநிதி ந.சிவராஜா தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகளில் நோயாளிகள் பரிசோதிப்புக்காக சேர்ப்பிக்கும் மலம், சிறுநீர், சளி மற்றும் பயன்படுத்தி வீசப்படும் கட்டுத் துணிகள், ஊசிக் குழல்கள், சத்திரசிகிச்சைகளில் அகற்றப்படும் உடல் இழையங்கள் என்று தினமும் ஏராளமான மருத்துவக் கழிவுகள் குவிந்து கொண்டிருக்கின்றன. ஆபத்தான கிருமிகளைக் கொண்டிருக்கக் கூடிய இக்கழிவுகள் எரித்து அகற்றப்பட வேண்டும் (incineration) என்பதும்,கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டே வெளியேற்றப்பட வேண்டும் என்பதும் பொதுச் சுகாதார நியதி. ஆனால், யாழ் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இத்தகைய கழிவகற்று வசதிகள் இல்லை.

இந்தப் பிரதேச மக்கள் இடம்பெயர்வதைத் தவிர வேறு வழியில்லை என்று மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கும் குடிதண்ணீர் வசதி போதுமானதாக இல்லாததால் காலப் போக்கில் ஒட்டுமொத்த மக்களும் இடம்பெயர வேண்டி வரும் என்று தெரிவிக்கின்றனர்.

Related Posts