பெண்ணொருவர், தனது நான்கு வயது மகளுக்கு பிரிட்டோன் மருந்துக்கு பதிலாக வேறொரு மருந்தை மாற்றிக்கொடுத்ததால், அச்சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்துள்ளாரென, சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மூதூர் கட்டைப்பரிச்சானை சேர்ந்த சிவகாந்தன் பிறெஸமி (வயது 4) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறுமிக்கு தடிமல் ஏற்பட்டமையால், அவரது தாய், பிரிட்டோன் மருந்தை பருகக் கொடுத்துள்ளார். இதனை பருகிய அச்சிறுமி, சிறிது நேரத்தில் வயிறெரிச்சல் என கத்தியுள்ளார்.
உடனடியாக சிறுமி பருகிய மருந்ததை அவரது தந்தையும் பருகவே, பிரிட்டனுக்கு பதிலாக வேறொரு மருந்து கொடுக்கப்பட்டுள்ளதாக தந்தை தெரியப்படுத்தியுள்ளதுடன் அவரும் மயங்கிக் கீழே விழுந்துள்ளார்.
சம்பவம் நடைபெற்ற வேளை, மின்சார துண்டிப்பு ஏற்பட்டிருந்ததாகவும் வயோதிபர்கள் உடல்நோவுக்கு தடவும் மீதைல் சலிசிலேட் மருந்தையே, சிறுமியின் தாய்? சிறுமிக்கு பருகக்கொடுத்துள்ளாரென்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிறுமி மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனரெனவும், எனினும் சிறுமி சிகிச்சை பலனின்றி, உயிரிழந்துள்ளாரென்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறுமியின் தந்தை வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரேத பரிசோதனைக்காக சிறுமியின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில், சம்பூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.