யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குவதுடன், அவர்களது நீதியான போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கு கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என வவுனியா வளாக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
வவுனியா வளாக ஊழியர் சங்கத்தின் தலைவர் கே.பூங்கண்ணன், செயலாளர் எம்.முகுந்தகுமார் ஆகியோர் கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
”யாழ். பல்கலைக்கழகத்தில் அனேகமான முறையீடுகளை தவறாது சுட்டிக்காட்டி யாழ். பல்கலைக்கழகம் சீரிய முறையில் இயங்க வழிவகுக்கப்படுகின்றது.
ஊழியர் நலனில் அதீத அக்கறையுடனும் செயற்பட்டு வருவது மட்டுமல்லாது சமூக சீர்திருத்தம், சமூக மேம்பாடு மற்றும் இடர்கால உதவிகளைக் கூட புரிந்து வந்த யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கமானது, கடந்த சில நாட்களாக ஊழியர் நலன் சார்ந்ததும், சில விரும்பத்தகாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய உயர் அதிகாரிகளினது செயற்பாடுகளைக் கண்டித்தும், அதற்கு நீதி கோரியும் தொடர்ச்சியாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதானது நல்லாட்சி அரசில் ஊழல், நல்லதொரு நிர்வாகமும் அதன்மூலம் நல்லதொரு சமூக மேம்பாடும், உயரிய பாதுகாப்பும் சாதாரண மக்கள் யாவருக்கும் கிட்டும்.
இது இலங்கை வாழ் சகல மக்களுக்கும் ஒரு முன்னுதாரணமான நிலையாகும். போராட்டத்தை யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தோழமை சங்கமாகிய வவுனியா வளாக ஊழியர் சங்கமானது முழுமனதுடன் ஆதரிக்கின்றது.
அவர்களது நீதியும், நியாயமுமான போராட்டம் தொடரும் பட்சத்தில் எமது சங்கமும் அவர்களுடன் கைகோர்க்கும்.
யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக சில புல்லுருவிகள் செயற்படுவதனையிட்டு நாம் மிக மனவேதனையடைகின்றோம்.
இவ்வாறான புல்லுருவிகளின் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதுடன், இவர்களது செயற்பாடானது சமூகத்தில் மேலும் பல சமூக கலாச்சார சீர்கேடுகளை ஏற்படுத்த வழிவகுக்கும்.
மேலும், பல போராட்டங்கள் ஏற்பட வழிவகுக்கும் என்று கூற விரும்புகின்றோம். எனவே, உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல் இருப்பதே நன்மை பயக்கும்.
இதனை உணர்ந்து நீதியான போராட்டத்திற்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் தமது சுயநலன் கருதியும் தம்மை சார்ந்தவர்களை திருப்திப்படுத்துவதுமே” ஆகும் என வவுனியா வளாக ஊழியர் சங்கம் தனது குறிப்பிட்டுள்ளது.